வியாழன், 16 டிசம்பர், 2010

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர் என்று அழைக்கவும் வேண்டுமோ!


இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தியதுண்டு. பிறக்க விருக்கும் 2011ஆம் ஆண்டு சனவரி திங்கள் 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சிராப் பள்ளியில் நடக்க இருக்கும் உலக நாத்திகர் மாநாடு சந்தேகம் இல்லாமல் மிக வித்தியாச மான மாநாடாகும்.
திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாடுகளை நடத்துகிறது.
பன்னாட்டு (International) மாநாடு என்பதால் அதற்கேற்ற வசதிகளுடனும், ஏற்பாடுகளுடனும் இந்த மாநாடு நடைபெறப் போகிறது.
இந்தியாவில் மும்பை, விஜயவாடா போன்ற இடங்களில் இதற்கு முன் நடந்த துண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த பார்பரா ஸ்மோக்கர் என்ற அம்மையார் குறிப்பிட்டது போல உலக நாத்திக அமைப்புகளின் தலைமையிடம் தந்தை பெரியார் பிறந்த - திராவிடர் கழகம் செயல்படும் தமிழ்நாடு தானே!
தமிழ்நாட்டில் நடக்காமல் வேறு எந்த நாட்டில் நடந்தாலும், அதன் உண்மைத் தன்மை பொலிவு பெறாதே!
கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்பு கொண்டும் திட்டமிட்டும் பணிகள் அமைதி யாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலக நாத்திக, மனித நேய அமைப்புடன் (IHEU - International Humanist and Ethical Union) திராவிடர் கழகம் இணைக் கப்பட்டுள்ளது (Affiliated).
இந்த அமைப்பு நடத்திய பல மாநாடுகளில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றதுண்டு.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் வெளிநாட்டுப் பகுத்தறி வாளர்கள், உலக நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
நாத்திக இயக்கம் மக்கள் இயக்கமாக நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் - தந்தை பெரியார் அவர்களே இதற்கு மூலகாரணம். தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம் பெரியார் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.
பொது இடங்களில் கடவுள் மறுப்பு வாசகக் கல்வெட்டுகளையும், தந்தை பெரியார் சிலைகளையும் கண்டு ஆச்சரியக் குறியாக நின்றார்கள்.
வரும் சனவரியில் நடப்பதோ முழுக்க முழுக்க அவர்களின் மனித நேய அமைப்பின் (IHEU) அனுமதியோடு, அங்கீகாரத்தோடு நடக்க இருப்பதால், அதன் தன்மை பல வகைகளிலும் புதுமையான, பொருள்மிக்க நிகழ்ச்சி நிரலுடன (Agenda) அமையும்.
அதே நேரத்தில் நமது தனித் தன்மைகள் மிடுக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
திருச்சி மாநாகரிலும், வல்லம் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களிலும் நிகழ்ச்சி கள் மாறிமாறி நடக்கும்.
மனித நேய அமைப்புகளின் முன்னாள் தலைவர் லெவி ஃபிராகல் (நார்வே), பெக்கா எலோ (பின்லாந்து), ராய் பிரவுன் (சுவிட் சர்லாந்து) போன்ற உலகம் அறிந்த நாத்திக அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
அறிவியல் கண்காட்சி, புத்தகக் கண் காட்சிகள் இடம் பெறும். திருச்சியில் எழுச்சி மிக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உன்னதமாக இருக்கப் போகிறது.
இரண்டாம் நாள் பேரணி முடிந்த நிலையில், திருச்சியில் உழவர் சந்தையில் பல லட்ச மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கும் பொது மாநாடு நடைபெற உள்ளது. வெளிநாட்டு அறிஞர்களுடன், கலைஞானி கமலகாசன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் போன்றவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல துறைகள், அமைப்புகளைச் சார்ந்த வெளிப்படையான பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், பேராசிரி யர்கள் கருத்துகளை வழங்கிடக் காத்திருக் கின்றனர்.
மூன்று நாள் மாநாடுகளிலும் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு முத்திரை பொறிக்க உள்ளார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 52 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கோடு பாடினார்.
அந்த உண்மையின் வீச்சை விரிவாக உலக நாத்திகப் பேரறிஞர்கள் நேரில் காணவிருக்கின்றனர்.
கழகக் குடும்பத்தினரே,
பகுத்தறிவாளர்த் தோழர்களே!
இந்த வாய்ப்பை நாம் நழுவவிடலாமா?
இத்தகைய உலக மாநாட்டை நம் வாழ்வில் வேறு எப்பொழுதுதான் காணப்போகிறோம்? நம் காலத்தில் கணீர்என ஒலித்து நடை போடும் இந்த மாநாட்டில் நாம் நடைபோட வேண்டாமா? நம் பிள்ளைகள் பார்த்துக் களிக்க வேண்டாமா?
பல மாதங்களுக்கு முன்பே இம்மாநாட்டிற் கான அறிவிப்புக் கொடுத்தாகிவிட்டது. உங்கள் பயணத்தை நீங்கள் உறுதியாக முடிவு செய்திருப்பீர்கள் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.
பெரியார் தமிழர் மண்ணில் போட்ட விதை உலகம் பூராவும் பூத்துக் குலுங்குகிறதே என்று மூடநம்பிக்கையின் மொத்த வியாபாரிகள் புழுங்கத்தான் செய்வார்கள்.
புரியாமல் மூளை மூடிக்கிடந்தவர்களின் முகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ந்து, புது மனிதர்களாகப் புன்னகைத்து மலரும் வாய்ப்புக் கூட உண்டு. எனவே அரை குறையாக இருப்பவர்களைக் கூட கைபிடித்து அழைத்து வாருங்கள் - இது ஒரு மனிதத் தொண்டு என்பதை மறவாதீர்கள்!
விஷயங்களால்தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர, விஷயங்களே காதிற்கு எட்டாமல் செய்துவிட்டால் எப்படி மனிதன் அறிவாளியாக முடியும்? அதைத் தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன (விடுதலை, 14.7.1970)
என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
விஷயங்களைத் தெரிந்து கொள்ள, விஷயங்களை விளங்க வைக்க உற்றா ரோடும், உறவினரோடும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக முற்றுகையிடுவோம், வாரீர்! வாரீர்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக