புதன், 22 மார்ச், 2017

பேலியோ எதிர்பாளர்களுக்கு பெரியார் பதில் சொல்கிறார் !

பேலியோ எதிர்பாளர்களுக்கு பெரியார் பதில் சொல்கிறார் !


(வெவ்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் உணவு முறை குறித்து கூறிய செய்திகள் )


இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றன .மனிதன் ஒருவனைத்தவிர அநேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத்தான் பயன்படுகின்றன ,ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன 
- விடுதலை 03/02/1964

மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம் தான் .அதை விட்டுவிட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகின்றார்கள் .இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள் .மக்கள் விவசாயப்பண்ணை வைத்து கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்து பெருக்க வேண்டும் .பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்

-விடுதலை 03/02/1964

நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவை தாராளமாக சாப்பிட வேண்டும் .மலிவு விலையில் கிடைக்கப் பெரிய பெரிய மாட்டுப்பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும் .மாடு தின்பது பாவம் அல்ல .அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும் , நமது சாமிக்கே மாடு ,எருமை ,கோழி ,பன்றி முதலியன காவு கொடுத்துதானே வருகின்றார்கள்
--விடுதலை 03/02/1964

நம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றது:பயனற்றது ,மாமிசம் சாப்பிடுவதை விட்டுக் காய்கறிகளை மட்டும் உண்பது நமக்கு கேடாக வந்த பழக்க மாகும் ,மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் ,மூடத்தனமாகும் .வட நாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி ,வலிவு,துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால் தான்
---விடுதலை 03/07/1964

மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகி விட்டது .ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்பதில்லை ,ஆனால் அவர்களே வஞ்சம் ,கொடுமை மிக்கவராயுள்ளனர் ,வாயினால் மட்டும் ஜீவகாருண்யம் பேசுவது மோசடியே
---விடுதலை 30/05/68

காய்கறிகள் சாப்பிடுவதை விட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன் எப்படி என்றால் உயிர் இருப்பதால் தான் அது ஜீவனாகின்றது ,ஜீவனை வதைத்து சாப்பிடுவது மாமிசமாகின்றது ,ஆகவே ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும் போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது .என்று போசு சொல்கிறார் .எனவே ஒரு ஜீவனைத் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணர நேரிட்டது ,இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது .ஆனால் மாமிசம் அப்படியல்ல .ஒரு ஜீவனைச் சாப்பிடுவதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் .அதுவும் நொடியில் முடிந்து போகும் ,ஆதலால் தான் கிழங்கு ,கீரை ,காய்கறிகளை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யம் ஆகும்
-விடுதலை 23/02/1969

பன்றி ,மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது ? பழக்க வழக்கத்தின் காரணமாக ,சுற்றுச் சார்பு காரணமாகவே சாப்பிடுவது கூடாது என்று உள்ளதே ஒழிய வேறு ஒன்றும் இல்லை
--விடுதலை 14.11.1972

மேல்நாட்டவர் மனஉறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவு முறைதான் காரணமாகும் .நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மனஉறுதி அற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவு முறை தான் ஆகும்
---விடுதலை 03/02/1964

நாம் சக்தி குறைந்தவர்களாகவும் ,மன உறுதியற்றவர்களாகவும் ,சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவு தான் ,அரிசி மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது ,அதில் சத்து இருக்காது .மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது ,அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிகளுக்கு ஏற்றதல்ல
-- -விடுதலை 03/02/1964

டேலோ இருக்க பயம் ஏன் ?

பேலியோ உணவுமுறையை தொடங்க நினைக்கும் பலர் இந்த உணவு முறையை தொடங்கினால் செலவு அதிகம் ஆகிறதே வெண்ணை என்ன விலை தெரியுமா ? நெய் என்ன விலை தெரியுமா ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர் .அவர்களுக்கு நம்முடைய ஒரே பதில் ‘’டேலோ இருக்க பயம் ஏன் ‘ என்பது தான்
ஆமாம் டேலோ என்றால் என்ன ?
ஆடு மற்றும் மாடுகளின் கெட்டியான கொழுப்பை சூயேட் என்று அழைப்பார்கள் .இது பொதுவான அரை வெப்ப நிலையில் திட நிலையில் இருக்கும்.டேலோவில் 50% நிறைவுற்ற கொழுப்பும் (saturated fat,), 42% ( mono saturated fat) நிறைவுறா கொழுப்பும் 4%பல்நிறைவுறா (polyunsaturated fat.)கொழுப்பும் உள்ளது உயர்வெப்ப சமையலுக்கு ஏற்றது . 350 - 400 டிகிரி செல்ஷியஸ் அளவு ஸ்மோக் பாயின்ட் கொண்டது .விலை மிக குறைவு. நம்மூர் கறிகடைகளில் இதை கேட்பதற்கு ஆளே இல்லை
டேலோவை எப்படி செய்வது ?
மிக எளிதாக செய்யலாம் . கொழுப்பை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு கொதிக்க விடவேண்டும் கொதித்தவுடன், கொழுப்பை கொட்டி கிளறிவிட வேண்டும் . மிக குறைந்த அளவு நெருப்பில் அடுப்பை வைத்து விட்டு அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்க கிளறி கொண்டே இருக்க வேண்டும். நீர் வற்றி ஆவியானவுடன் கொழுப்பு கரையத் துவங்கும். முழுக்க கரைந்து நெய்யாக மாறிய. பின் வடிகட்டி ஒரு அகல வாயுள்ள பாட்டிலில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது சமையலில் எண்ணெய்க்கு பதிலாக உபயோகித்து கொள்ளலாம். வெளியிலேயே காற்று புகாதவண்ணம் வைத்தால் 1மாதம் வரை கெடாமல் இருக்கும். வடிகட்டி மிச்சம் உள்ள வறுப்பட்ட கொழுப்பு துகள்களை அப்பிடியே சாப்பிடலாம் அல்லது காய்கறிகளோடும் சேர்த்து உண்ணலாம்
டேலோவின் மருத்துவ பயன்கள்
இருதய நோய் மற்றும் புற்றுநோயை தடுக்கும் CLA எனும் ஒமேகா 6 அமிலம் அதிக அளவில் உள்ளது
இன்ஃப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைக்கும்
விட்டமின் A, D, E மற்றும் K அதிக அளவில் கொண்டது
மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்ட்
எலும்புகளின் உறுதித்தன்மைக்கு மிகச் சிறந்த உணவு

நாலு மாத பேலியோவும் நானும் .....


உடல் எடைகுறைப்பிற்கான போராட்டம் என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே செய்து வந்திருக்கிறேன் .ஒவ்வொரு முறையும் எனது முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன .ஹெர்பாலைப் தொடங்கி பல்வேறு டயட் முயற்சித்து எதுவும் சரிப்பட்டு வராமல் ‘நாம குண்டா இருந்தா தான் அழகு ‘’என்று சமாதானம் செய்து கொண்டேன்
என்னை பார்த்தால் என் தந்தையை பார்ப்பது போலவே உள்ளது என்பார்கள் பலர் ,அவரது உருவ அமைப்பு ,குரல் ,உட்பட அவரது நகலாகவே நான் இருந்தேன் .ஆனால் அவர் 43 வயதில் மாரடைப்பில் இறந்து போனார் அவரது உடலமைப்பை கொண்டிருந்த எனக்கு 43 வயது தான் என்னுடைய எல்லைகோடு என்று நம்பியிருந்தேன் .இது பத்தாது என்று சர்க்கரை நோயும் எட்டிப்பார்க்க துவங்கி இருந்தது .எந்த டயட் ஆரம்பித்தாலும் முதல் இரண்டு நாட்கள் பிரச்சனை இல்லை மூன்றாவது நாள் ஏற்படும் தசை பிடிப்பு CRUMPS வலி உயிரே போய்விடும் .வலியின் அவதியில் மீண்டும் பழைய உணவு நிலைக்கே மாறிவிடுவேன்
என் மீது அன்பு கொண்ட பலரும் உடல் எடை குறையுங்கள் என்று அறிவுரை கூறும்போதும் ,வெளிநாட்டில் இருந்து வரும் மைத்துனர் உடல் எடை குறைக்க ஏதாகிலும் ஒரு சாதனங்கள் வாங்கி வரும் போதும் மீண்டும் ஒரு உத்வேகம் வரும் ஏதாகிலும் ஒன்றை முயற்சித்து முடியாமல் விட்டு விடுவேன்
அப்போது தான் முகநூலில் பேலியோ குறித்த பல்வேறு கட்டுரைகள் தென்பட மிக ஊன்றி படித்தேன் மருத்துவர் Mariano Anto Bruno Mascarenhas அவர்களோடு ஏற்பட்ட சந்திப்பில் ‘’நீங்கள் பேலியோ உணவு முறைக்கு தகுதியான நபர் முதலில் இரத்த பரிசோதனை செய்து எனக்கு அனுப்புங்கள்” என்றார் மிகுந்த பயத்துடன் பேலியோ ஆரம்பித்தேன்
தொடக்கத்தில் சடசடவென எடை குறைந்தது முதல் 3௦ நாட்களில் 7 கிலோ எடை குறைந்தது .எனது எடை எப்போதும் மூன்று இலக்க எண்களில் தான் இருக்கும் இரண்டு இலக்க எண் வந்து விட்டாலே பெரிய வெற்றி என்று நினைத்தேன் முதல் பத்து நாள் தலைவலி வரும் ,அது வரும் ,இது வரும் என்றார்கள் எதுவும் இல்லை மிக விருப்பமான உணவை டயட் என்று சொன்னால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கமுடியும் ?
வெற்றிகரமாக 12௦ நாட்களை முடிக்க போகிறேன் ,ஏறக்குறைய 2௦ கிலோ எடை இழப்பு ஏற்பட்டிருக்கிறது .சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபட்டு சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் crumps இல்லை ,குறட்டை இல்லை,இரவு 1௦ மணி என்றால் கண்ணை சுழற்றி கொண்டு வருகிறது தூக்கம் .
பேலியோ தொடங்குவதற்கு முன் HbA1C அளவு 6.9 இப்போது HbA1C அளவு 5.4எடை குறைய குறைய எனது இலக்கை மாற்றி கொண்டே வருகிறேன் ,சாத்தியமே இல்லாத ஒன்று என நம்பியிருந்த ஒரு விஷயம் சாத்தியப்படும் போது சாதனை படைக்க வேண்டியது தானே
பேலியோவிற்கு முன் ,பின் எனது அனுபவங்களை எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும் அனால் இந்த பதிவு அதற்காக எழுதப்படவில்லை நன்றி சொல்ல எழுதப்பட்டது

எனது முதல் நன்றி தமிழ் சமூகத்திற்கு பேலியோவை அறிமுகப்படுத்திய நியாண்டர் செல்வன் அவர்களுக்கு ,அதே போல் எனக்கு அறிமுகப்படுத்திய மருத்துவர் ப்ருனோ அவர்களுக்கும் ,கொஞ்சமும் சலிக்காமல் உணவை முறைப்படுத்தி வரும் துணைவியார் வித்யா அவர்களுக்கும் ,ஆலோசனை வழங்கும் அன்பு சகோதரர் மருத்துவர் ஜெகன் அவர்களுக்கும் ,தனது அன்பான அறிவுரையால் தொடர்ந்து என்னை பயணிக்க வைத்த எனது தாயார் கலைமணி அவர்களுக்கும் மற்ற பேலியோ நண்பர்களுக்கும் நன்றி !நன்றி !!
எடை குறைப்பில் இப்போது பாதி தூரம் தான் கடந்து இருக்கிறேன் இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது என்றாலும் அந்த ஆனந்த அனுபவத்தை எழுத முடியாது .முயற்சித்து தான் பார்க்க வேண்டும் ,விருப்பம் இருப்பவர்கள் முயற்சித்து தான் பாருங்களேன்

வியாழன், 16 மார்ச், 2017

NEET தேர்வை எதிர்ப்போம் ! ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பினை பாதுகாப்போம் !௦- மருத்துவராக விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது
-௦- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை

-௦-. நாடு முழுவதும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை

என பல்வேறு வகையான காரணங்களை அடுக்கி நீட் தகுதி தேர்வை இந்தக் கல்வியாண்டு தொடங்கியே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


-நீட் தகுதி தேர்வு என்றால் என்ன?

 
இந்திய மாநிலங்களிலிருந்து 15 விழுக்காடு எம்.பி.பி.எஸ்., இடங்களையும், 50 விழுக்காடு மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான (post graduation ) இடங்களையும் பொதுத் தொகுப்புக்குக் கொண்டு சென்ற மத்திய அரசு அதற்காக ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது.அதற்க்கு பெயர் தான் நீட் தேர்வு NEET--(National Eligibility cum Entrance Test)


தற்போது மருத்துவ சேர்கையில் உள்ள நடைமுறை என்ன?

 நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,715 இடங்கள் உள்ளன. மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 85 சதவீத இடங்களை அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அகில இந்திய ஒதுக்கீடு போக (15 சதவீதம்) மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவை மாநில அரசுகளின் ஒதுக்கீட்டிற்கு இடங்களைத் தருவதில்லை. அவை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மீதி 85 சதவீத இடங்களையும் தாமே நிரப்பிக் கொள்கின்றன. இது தற்போது வரை உள்ள நடைமுறைமருத்துவ சேர்கையில் இனி என்ன நடைமுறை ?


முந்தைய சேர்கை போல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 விழுக்காடும், மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு 50 விழுக்காடும் மாநிலங்களிலிருந்து போது தொகுப்புக்கு கொண்டுசெல்லும் நடைமுறை இல்லாமல் நூறு சதவீத இடங்களும் பொதுத் தொகுப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அந்த தேர்வின் முடிவின் படியே மருத்துவ கல்லூரியில் சேர்க்கை நடைபெறும்


 நீட் தேர்வை ஏன் எதிர்க்க வேண்டும் ?


-பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட முறையிலான பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் பயன் அடையும் வகையில் தேர்வு நடத்துவது நியாயத்திற்கு புறம்பானதாகும்

+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தகுதி தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு மருத்துவ சேர்கை நடத்தினால் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களும், கிராமப்புற முதல் தலைமுறையில் படித்து வரும் மாணவர்களும் வஞ்சிக்கபடுவார்கள்


மாநில அரசுகள் பணம் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அத்தனை இடங்களையும் பொது தொகுப்புக்குத் தாரை வார்ப்பது மத்திய அரசின் அராஜக போக்கு ஆகும்

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த நீட் நுழைவுத் தேர்வினால் பலன் பெற்றவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்படுவதில்லை

தென் இந்தியாவில் தேர்வுகள் நியாயமாக நேர்மையாக நடைபெறுவதை போல் வட மாநிலங்களில் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதில்லை இரண்டையும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பது மிக பெரும் தவறு

தமிழ்நாட்டில் உள்ள தரமான மருத்தவ கல்லூரிகள் போல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை நீட் தேர்வின் மூலம் மற்ற மாநிலத்திற்கு அது களவாடப் படும்

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இப்பொழுதுள்ள தேர்வு முறையில் (+2 தேர்வு அடிப்படையில்) அதிக இடங்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதால், இதனை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சி, வஞ்சகம், சதித் திட்டம்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) என்பதாகும். ஆகவே தான் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்


+2 தேர்வு முடிவின் அடிப்படையில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருந்தது ?தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 2853. விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25379. +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் 10,538, தாழ்த்தப்பட்டோர் 5720, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5314, பிற்படுத்தப்பட்ட இசுலாமியர்கள் 1419, உயர் வகுப்பினர் 1228, அருந்ததியர் 928, மலை வாழ் மக்கள் 232.

பொதுப் போட்டிக்கான இடங்கள் 884. அதிக மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159, பொதுப் பிரிவினர் (உயர் ஜாதியினர்) 68, இசுலாமியர் 32, தாழ்த்தப்பட்டோர் 23, அருந்ததியர் 2, மலைவாழ் மக்கள் 1 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.பார்ப்பன உயர்சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவீதம் கூட இல்லை


நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை இருப்பின் எப்படி இருக்கும் ?


ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்ஜாதி ,பார்ப்பனர்கள் பனியாக்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள்
 

நீட் வேண்டாம் ஆனால் என்ன செய்ய வேண்டும் ?


 
1.
தமிழகப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்துதல் மிக அவசியம்

  
2.
கற்பித்தலை அறிவு பெறும் கற்றல்என்ற முறையில் மாற்றியமைத்தல்; கற்றலும், கற்றலின் பயன்பாடும் கூர்மையாகும் விதத்தில் பயிற்றுவித்தல்


.
3.
தேர்வு முறையைக் கற்றல்’-ஐ அடிப்படையாகக் கொண்டு, சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாற்றியமைத்தல்.


 
4.
வினாத்தாள்கள் நீட்போன்ற தேர்வுகளுக்கு கேட்கப்படுவதைப்போல் தரமாக இருக்குமாறு அமைத்தல். இதன்வழி, தனியாக நீட்நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி மையங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தை தேவையற்றதாகச் செய்தல்


.
5.
ஆசிரியர்களின் தரத்தைத் தொடர்பயிற்சிகளின் மூலம் மேம்படுத்துதல்.
6.
கிராமப் பள்ளி மாணவர்களுக்கு தாராளமான நிதியுதவியும், பயிற்சியும் தர பல்லாயிரம் தன்னார்வலர்களை களமிறக்கல்

வியாழன், 17 ஏப்ரல், 2014

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டே !

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற விழாவாக உலங்கெங்கும் உள்ள கிருஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர் .இன்றைக்கு  கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உண்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் வார்த்தைகளின் படி  ஆராய்வோம். .

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், என்கிறது பைபிள் இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது :

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25

அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தெடாங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது:

யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54

அதாவது இயேசு கல்லறையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32)

WBTC மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.

அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3

அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்? அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா? அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்:
 இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்                         பகல்                               இரவு
         வெள்ளிக்கிழமை-- -             இல்லை-- -       11 இரவு--
         -சனிக்கிழமை-                       1  பகல்-          1 இரவு
 -ஞாயிற்றுக்கிழமை------ --            இல்லை         இல்லை

 --மொத்தம்--                                  1 பகல்---                   2 இரவு
                                                                                              
-------------------------------------------

மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும். ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா? பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே! மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா?இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா? இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா? புனித வெள்ளி கொண்டாடும் கிருஸ்துவர்களே சற்று சிந்தியுங்கள் !

வியாழன், 3 ஏப்ரல், 2014

வணிகர்களை வஞ்சிக்கும் அரசுகளுக்கு பாடம் புகட்டுவீர் !


வணிகர்களுக்கு என்று தனித்த அரசியல் அடையாளம் என்பது கிடையாது தான் !.பலரும் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்கேற்றும் உள்ளனர் ,பெரும்பாலான வணிகர்கள் ராவணன் ஆண்டால் என்ன ?ராமன் ஆண்டால் என்ன ? என்று வாக்குச் சாவடிக்கு கூட வராமல் வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்கள் . இப்போது நடைப்பெற போகும் இந்த தேர்தலையும் அப்படிதான் பார்க்கபோகிறோமா? இதை படித்து விட்டு கொஞ்சம் யோசியுங்கள் .
என் பள்ளி பருவத்தில் என் தாய் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் போது 50பைசா 1 ருபாய் கொடுத்து அனுப்புவார் .பள்ளிக்கு அருகில் சின்னதாய் கடை போட்டுள்ள பாட்டியிடம் பள்ளி இடைவேளையில் நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவேன் இன்றைக்கு அதே பள்ளி இருக்கிறது ஆனால் அந்த பாட்டி இல்லை அவள் விற்ற கல்லை உருண்டை ,கமர்கட் ,குச்சிமிட்டாய் ,கொய்யா பழம் எதுவும் இல்லை .அதற்க்கு பதிலாக Lays,kurkure,MUNCH,டைரி மில்க் ,CHEETOOS,NOODULES,என பலவும் தொங்குகிறது .ஆம் நண்பர்களே ஒரு கிழவியின் வியாபாரத்தை பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் கபளீகரம் செய்து இருக்கின்றன .காளி மார்க் சோடா இல்லை ,நன்னாரி சர்பத் இல்லை ,என பட்டியலிட்டால் அழிந்து போன தொழில்கள் கணக்கிலடங்கா.
இந்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை சில்லறை வணிகர்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் பெரும் கேடாய் அமைந்ததை எவர் மறுப்பார் .ரிலையன்ஸ் நிறுவனம் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் விற்க வந்த பிறகு மற்றவற்றை பற்றி சொல்லவா வேண்டும் ? இதற்க்கு காரணமான காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படவேண்டும் .அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பி ஜே பி யை சொல்ல முடியாது ஏனெனில் இரண்டு கட்சிகளுக்கும் பொருளாதார கொள்கையில் வேறுபாடு கிடையாது .ஒரு வேளை பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தால் இதை விட மோசமான நிலை தான் இருந்திருக்கும் .இன்றைக்கு பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் பிஜேபியை தூக்கி பிடிப்பதை பார்க்கிற போது காங்கிரசை விட பிஜேபி ஆபத்தானதாக தெரிகிறது .இது இந்திய அரசியல்.தமிழக அரசியல் என்று எடுத்து கொண்டால் ஆளும் அதிமுக அரசு வணிகர்களுக்கு இழைத்து வரும் துரோகம் ‘’ஒரு புரட்சிகர துரோகம் ‘’
‘’
அம்மா ‘’ பெயரில் ஒரு சுருக்கு கயிறு
ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் அத்தியவாசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் தான் அது நல்ல அரசு .தரமான பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எல்லா வணிகர்களும் விரும்புகின்றனர் .ஆனால் ஆளும் அதிமுக அரசு உள்ளூர் தொழிலை நசுக்கி அதில் அரசியல் செய்து வருகிறது அதற்க்கு பல உதாரணங்களை சொல்லலாம்
‘’
அம்மா’’ குடிநீர்
எல்லா பேருந்து நிலையங்களிலும் கல்வி கற்க முடியாத சிறுவர்கள் ‘’வாட்டர் பாக்கெட் ‘’ ’வாட்டர் பாக்கெட் ‘’ கத்தி கொண்டு வருவதை சில மாதங்களுக்கு முன் பார்த்திருப்பீர். இப்போது என்ன ஆனார்கள் அந்த சிறுவர்கள் ? யோசித்து பார்த்தீர்களா? சுத்தமான குடிநீரை அனைத்து மக்களுக்கும் தர வக்கில்லாத அரசு தனது அரசியல் விளம்பரதிற்க்காய் பொருளின் அடக்க விலையை விட விலை குறைத்து அப்பாவி சிறுவனின் வயிற்றில் அடித்துள்ளது
அம்மா உணவகம்
சாலையோர உணவகங்கள் ,நடுத்தர உணவகங்கள் இன்றைக்கு விலையேற்றத்தாலும் மின்வெட்டாலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது .இட்லிக்கு சட்னி கூட கரண்ட் இருந்தா தான் இந்த நிலையில் அவர்களின் தொழிலுக்கு எமனாக வந்தது அம்மா உணவகம் .ஒரு சப்பாத்தியின் விலை ஒரு ரூபாய் ஒரு சாப்பாட்டின் விலை 5 ருபாய் ,ஒரு பொருள் அதன் நிர்ணய விலையை விட அதிகம் விற்றால் மோசடி என்றால் அதே பொருள் அதன் அடக்கவிலையை விட மிகவும் குறைத்து விற்பது அதுவும் அரசியல் விளம்பரதிற்க்காய் செய்வது எவ்வளவு பெரிய மோசடி அதை தான் ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது .இதனால் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளோ ,பெரிய உணவங்களோ பாதிக்க படவில்லை .பாதிக்கப் பட்டவர்கள் சாலையோர ,நடுத்தர உணவகங்கள் தான் வறுமையின் பிடியில் அம்மா அம்மா என்று அவர்கள் கத்துவது விளம்பர சத்தத்தில் அம்மாவுக்கு தான் கேட்கவில்லை பாவம்!
அம்மா மருந்தகம்
திட்டமிட்டு அதிமுக அரசால் அழிக்கப்பட்டு வரும் தொழில் மக்கள் தொடர்பு மருந்து வணிகம் . ஏற்க்கனவே பன்னாட்டு கம்பனிகளின் வருகையாலும் ,சங்கிலி தொடர் வர்த்தகதினாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு மருந்து வணிகம் அம்மா மருந்தகம் ,மற்றும் கூட்டுறவு மருந்தகத்தால் மூடு விழாவிற்கு தயாரகி வருகிறது .ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு தான் அரசால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாய் மருந்துகள் வழங்கப்படுகிறது .இப்போது அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகத்தில் 15% முதல் 20% வரை தள்ளுபடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது .மக்களுக்கு தள்ளுபடி வழங்கியதை அரசாங்கம் மானியமாக மீண்டும் திரும்பி மருந்தகத்திற்கு தந்துவிடும் .இப்போது மருந்து வியாபாரம் செய்பவர்களின் கதி அவர்களால் தள்ளுபடி தராமல் தொழிலை நடத்த முடியாது ,தள்ளுபடி தந்து வியாபாரமும் பண்ண முடியாது மற்றவர்களின் உயிரை காக்க மருந்து கொடுக்கும் மக்கள் தொடர்பு மருந்து வணிகர்களின் உயிரை அரசியல் லாபங்களுக்காய் அம்மா குடித்து வருகிறார்
இந்த பட்டியலில் திரை அரங்கங்கள் ,விசைத்தறி கூடங்கள் ,என பலவும் வரிசையாய் நிற்கிறது ,
இந்திய அரசியலில் காங்கிரஸ் ,பிஜேபி எப்படி தூக்கி எறியப்படவேண்டியதோ அவ்வாறே அதிமுக அரசும் அகற்றப்பட வேண்டியது . அன்பான வணிகர் பெருமக்களே !சிறு மற்றும் குறு வியாபாரிகளே !உழைக்கின்ற வர்க்கமே ! நமது வணிகத்தை பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்தும் ,பனியா கும்பளிடமிருந்தும் மட்டும் அல்ல தமிழக அரசின் வணிக விரோத கொள்கையில் இருந்தும் நம்மை காப்பாற்ற இப்போதுள்ள ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே !அன்பார்ந்த வாக்காள வணிக பெருமக்களே வணிகர் விரோத அதிமுக ,பிஜேபி ,காங்கிரெஸ் கட்சிகளை புறக்கணிப்பீர்!

பேலியோ எதிர்பாளர்களுக்கு பெரியார் பதில் சொல்கிறார் !

பேலியோ எதிர்பாளர்களுக்கு பெரியார் பதில் சொல்கிறார் ! (வெவ்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் உணவு முறை குறித்து கூறிய செய்திகள் ) இய...