வெள்ளி, 17 மே, 2019

சார்லஸ் டார்வினும் பரிணாமத் தத்துவமும்


             

சார்லஸ் டார்வினும் பரிணாமத் தத்துவமும்

                                                  -  மருத்துவர்.பழ.ஜெகன்பாபு

 






     உலகில் தோன்றிய பல அறிவியல் அறிஞர்களில் சார்லஸ் டார்வின் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார் .
ஏனெனில் சூரியனைப் பற்றியும் , பூமியைப் பற்றியும் அதன்  சுழற்சியை பற்றியும் என இயற்பியல்  மற்றும் வான்வெளி பற்றி பல பல பழைய மதநம்பிக்கைகள் நிலவிவந்த சூழலில் தங்களது ஆராய்ச்சியின் வாயிலாக அவைகளை பல்வேறு அறிஞர்கள் தகர்த்து வந்தனர் . அவ்வாறே உயிரியலில் அத்தகைய நிலையை ஏற்படுத்தியவர் சார்லஸ் டார்வின்  . அவர் மத நம்பிக்கை அடிப்படையிலான படைப்பு தத்துவத்தையே தன்னுடைய பரிணாம தத்துவத்தால் ஆட்டம் காண செய்தார் .


ஆதாம் ஏவாள்

படைப்பு தத்துவமும் மத  நம்பிக்கையும் :

உலகில் பல மதங்கள் உள்ளன .ஆனால்  , அவை அடிப்படையில் கொண்டுள்ள கருத்து என்னவென்றால் கடவுள் பூமியை படைத்து அதில் பல உயிரினங்களையும் தோற்றுவித்து அவரே மனிதனையும் படைத்தார் என்பதே . அதே நேரத்தில் பைபிள் என்ன சொல்லுகிறது என்றால் ஆண்டவன் முதல் நாள் வானத்தையும் பூமியையும் பின்பு நீரினையும் பின்பு உயிரினங்களையும் படைத்து பின்பு  “ஆறாம் நாளில் மனுஷ குமாரியையும் (ஏவாள் )அதன்பின்பு அவளின் விலா எலும்பில் இருந்து மனுஷ குமாரனையும் (ஆதாம் ) படைத்தார்” என்பதாகும் இதையொட்டியே யூத  , இஸ்லாமிய மதநம்பிக்கைகளும் உள்ளன .

        இந்து மதத்தில் படைப்புக்கென்று  ஒரு தனிக்கடவுளை உருவாக்கி வைத்துள்ளனர் .” படைப்புக் கடவுள் பிரம்மா”  என்றும் அவரது தலை , தோள் , தொடை மற்றும் காலில் இருந்து தான் மனிதன் பிறக்கிறான் என்றும் , அவ்வாறு எந்த இடத்திலிருந்து பிறகு அதை வைத்தே  நான்கு வகை வருணங்கள் (ஜாதிகள்) உருவாகின்றன என வருண பேதம் (ஜாதி பேதங்கள்) புகுத்தப்பட்டுள்ளது . இப்படி அனைத்து மதங்களின் மூடநம்பிக்கை அடிப்படையானது இந்த மனிதப் படைப்பு .  எனவே உலகிலேயே மிக உயர்ந்த சக்தி ஒன்று உள்ளது அது கடவுள் .  அவர்தான் மனிதனையும் ,  உலகையும்  படைத்தார் என்ற அடிப்படையில் இதுதான் மதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன

மத நம்பிக்கையும் அறிவியல் உண்மைகளும் :

மனிதன் அறிவியல் வளராத காலத்தில் ஒவ்வொரு அன்றாட நிகழ்விலும்  சூரியனை ,  இடியை மழையைக் கண்டு அஞ்சினான். அதற்கு கடவுளுக்கும் தொடர்பு உண்டு என நம்பினான்

ஆனால் அறிவியல் வளர வளர பல  பழைய நம்பிக்கைகள் மாற்றம் கண்டன .  பூமி தட்டையாக உள்ளது என்பதே  பழைய கிறிஸ்தவ நம்பிக்கை .  

இந்து மதத்திலும் கூட இவ்வாறு நம்பப்பட்டது . அசுரன் ஒருவன் பூமியை பாயாக சுருட்டி கடலில் ஒளிந்து கொண்டான் என்றும், அவனை அழித்து  பூமியை மீட்க கடவுள் வராக  அவதாரம் எடுத்து வந்தார் என்றும் கதைகள் உள்ளன

(தந்தை பெரியார் தான்  , இதற்கு கேள்விகளைக் கேட்டார் ஒரே  ஒருவனால்  பூமியை சுருட்ட முடியுமா ? பூமியை சுருட்டி  கடலுக்குள்  ஒளிந்து கொண்டான் என்றால்   கடல்  எங்கு இருந்தது?  என்றார் )

இத்தகைய நம்பிக்கைகள் பலவற்றை அறிவியல் அறிஞர்கள் தக்க காலத்தில்  தக்க  அறிவியல் கண்டுபிடிப்புகளால் தகர்த்து வந்தனர். கோப்பர்நிக்கஸ்  (1473 - 1543 )  பூமி தான் சூரியனை சுற்றுகிறது என கண்டறிந்தார் . ஆயினும் தம்முடைய கருத்து பூமிதான் நடு நாயகமானது என்கிற பைபிளின் கருத்துக்கு எதிரானது என்பதையும் உணர்ந்தார் . இதனால் மூடநம்பிக்கையாளர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகவும் அஞ்சினார் . எனவே கோப்பர் நிக்கசின் நூலை அவருடைய சீடர்கள்  அவர் இறந்த நாளில் வெளியிட்டனர் 
Copernicus, Nicholaus

இந்நிலையில்  புரூனோ   (1548 -1600 )   கோப்பர் நிக்கசின் கோட்பாட்டினை தீவிரமாக ஆதரித்தார் என்பதற்காக  கத்தோலிக்க மதத்தலைமையால் ஊர் நடுவில் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டு எரிக்கப்பட்டார் . கலிலியோ கலிலி  (1564 -1642 )  தன்னுடைய தொலைநோக்கியின் மூலம் வான்வெளியை ஆராய்ந்து கோப்பார் நிக்கஸ் கருத்துக்கு வலு சேர்த்தார் . சூரியனை பூமிதான் சுற்றுகிறது என்றார் .  மேலும் உலகம் தட்டையானது என்ற பைபிளின் கோட்பாட்டிற்கு எதிராக உலகம் உருண்டையானது என்றும் அவர் அறிவித்தார் எனினும் மத பழமைவாதிகளின் சிறை தண்டனை மரண தண்டனை ஆகியவற்றை நினைத்து பயந்து திருச்சபை முன் மண்டியிட்டு அறிவியலுக்கு உகந்தகாக  இருந்தபோதும் தன் கருத்து தவறானது என்று ஒத்துக்கொள்ளும் நெருக்கடிக்கு உள்ளானார் .  ஆயினும் அவர் மரணமடையும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்

இதை போன்றே மனித வரலாற்றில்  முதன்மையானதாக கருதப்படும் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை டார்வின் வெளியிட்டப்போதும் பல அதிர்வலைகள் ஏற்பட்டது . பலர் அவர் கருத்தை எதிர்த்து  விவாதம் செய்தனர்.  பல இடங்களில் அவரது புத்தகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது . இங்கிலாந்து மற்றும் கேம்பிரிட்ஜ் சர்ச்கள் கடுமையாக எதிர்ப்பை  காட்டின.  ஆனால் இவற்றை  டார்வின்  எதிர்பார்த்திருந்தார் .  தன் கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.  இன்று உலகம் அவரின் பரிணாமத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

அறிவியல் முன் மண்டியிட்ட மதம் :

கோபர் நிக்கசை  அச்சுறுத்திய  மதம் , புரூனோவை தீயிட்டுக் கொளுத்திய மதம் ,கலிலியோவை வீட்டுச் சிறையில் அடைத்த  மதம் அறிவியல் வளர்ந்த போது தன் தவறை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று .


புருனோ மறைவுக்குப் பிறகும் அவர் கருத்துக்களுக்காக போற்றப்படுகிறார் ! எந்த ரோம் நகரில் கொல்லப்பட்டாரோ அதே ரோம் நகரில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு 1889 இல் அமைக்கப்பட்டது . 2008 மார்ச் மாதத்தில் பெர்லின்  நகரிலும் அவர் சிலை திறந்து வைக்கப்பட்டது . உலகம் தட்டையானது என்ற பைபிளின் கூற்றுக்கு மாறாக உருண்டையானது  தான் என்ற கருத்தை ஏறக்குறைய 360 ஆண்டுகளுக்குப் பின் கத்தோலிக்க தலைமையை ஏற்றுக் கொண்டது.  

அதேபோல் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை எதிர்த்த கத்தோலிக்க தலைமைப்பீடம் வாடிகன் 137 ஆண்டுகளுக்குப் பிறகு ஒத்துக்கொண்டது. “ புதிய அறிவு பரிணாமத் தத்துவத்தை அங்கீகரிக்கச் செய்கிறது”  என்றார் போப் ( தி இந்து 26 .10.1 996 )

                                   டார்வின் வாழ்க்கை குறிப்பு 

டார்வின் பிறப்பு:

1809 - பிப்ரவரி 12 ஷீரூஷ்பரி  என்னும் ஊரில் பிறந்தார் பெற்றோர் வைத்த பெயர் டார்வின் சார்லஸ் ராபர்ட்(Darwin Charles Robert ) . ஆறு குழந்தைகளில்  ஐந்தாவதாக பிறந்தார் . இவருக்கு பின் ஒரு தங்கை  பிறந்தார்.  இந்த ஆறில்  இரண்டு பேர் மகன்கள்  அதில் டார்வின் இளைய மகன் .  

இவரது குடும்பம் ஒரு கிறித்துவ குடும்பம் எனினும் முற்போக்கு சிந்தனை இவரது  குடும்பத்திலேயே உண்டு .  இவரது தாத்தா ஒரு பிரபல மருத்துவர்,  முற்போக்காளர்  , அறிவியல் சிந்தனை மிக்கவர் . ஜேம்ஸ் வாட்  ஜோசப் பிரிஸ்ட்லி ,போன்ற அறிஞர்கள் இவரது  நண்பர்களாயிருந்தனர். இவர் ஜீனோமியா (zoonomia ) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்

         டார்வின் அவர்களின் தந்தை ராபர்ட் அவர்களும் ஒரு புகழ்பெற்ற மருத்துவர் .பெருஞ்செல்வர் ,சமூகத்தில் செல்வாக்கானவர் .

படிப்பு:

        டார்வின் தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார் .  அதனால் ஒன்பது வயதினிலேயே விடுதியில்  சேர்க்கப்பட்டார் . டார்வின் படிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் செலுத்தவில்லை .  ஆனால்  இயற்கையை நேசித்தார் . இவர்  தாவரங்கள் மற்றும் பறவைகளை காணுதல் ,  வண்டுகளை சேகரித்தல்  , தாதுக்களை சேகரித்தல் போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபட்டார்.  டார்வினின் தந்தை அவரை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் .  ஆனால் டார்வினுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டமில்லை . அவர்  மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு திரும்பினார் . ஆனால் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்த போது கடல் வாழ் உயிரினங்களை சேகரித்தார் . தாவரங்களை  வகைபடுத்தக் கற்றுக் கொண்டார்.

 டார்வின் இவ்வாறு விலங்குகளையும் தாவரங்களையும் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதை கண்டு அவர் தந்தை வருந்தினார் . பின் டார்வின்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பை (பி.ஏ) மத சாஸ்திர பிரிவில் படிப்பை முடித்தார்.(B.A Theology )


நட்பு வட்டம் :

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் படிக்கும்போது தாவரவியல் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Henslow ) அவர்களின்  நட்பு கிடைத்தது

ஹென்ஸ்லவுக்கு  தாவரங்கள் ஆராய்ச்சியாளர்கள் ,புவியியல்  அறிஞர்கள் என ஒரு பெரிய வட்டம் இருந்தது . டார்வினுக்கும் அவர்களின் அறிமுகத்தால் மேலும் புவியியலின் மேல் ஆர்வமும்  ஏற்பட்டது .  அதேபோன்று ஹென்ஸ்லோ தாவரங்களை சேகரிக்க செல்லும் போது டார்வினையும் உடன் அழைத்துச் சென்றார்

கடல் பயண வாய்ப்பு :

டார்வினுடைய  நண்பர் ஹென்ஸ்லோவிற்கு  ராபர்ட் டிட்ஸ்ராய் (Robert Titzroy ) என்னும் கப்பல் கேப்டன் நண்பராக இருந்தார். அவரின் கப்பல் பயணம் உலகைச் சுற்றி வரப் போவதை ஹென்ஸ்லோ அறிந்தார் . அந்த பயணத்தின் போது தன் நண்பன் டார்வினை  உடன் அழைத்துச் செல்லுமாறு ஹென்ஸ்லோ  வேண்டினார் கேப்டன் டிட்ஸ்ராய் இதற்கு சம்மதித்தார் 
பீகிள்


கப்பல் பயணம் :

1831 ஆம் ஆண்டில் டிசம்பர் 27 அன்று பீகில்  எனப்படும் 242 எடை கொண்ட அரசாங்க கப்பல் உலகைச் சுற்றி ஆய்வு மேற்கொள்ளப் புறப்பட்டது . அந்த கப்பலின் கேப்டனாக ராபர்ட் டிட்ஸ்ராய் இருந்தார் .  சம்பளம் ஏதும் பெறாத இயற்கை அறிவியலாளராக டார்வின்  நியமிக்கப்பட்டு இருந்தார் . அப்போது அவருக்கு வயது 22 .  பீகிள் கப்பல் தென் அமெரிக்க கடற்கரை மற்றும் தென் கடல் தீவுகள் வழியாக உலகை சுற்றி வந்தது.  எரிமலைகள்  நிறைந்த கலப்பகோஸ் தீவு மற்றும் பசிபிக் , தென் அட்லாண்டிக்  பெருங்கடலில் உள்ள பல தீவுகளையும் ஆஸ்திரேலியா தீவுகளையும்  சுற்றி வந்தது .  இந்த கப்பல் பயணம் ஒரு ஐந்து ஆண்டுகள் நீடித்தது . டார்வின் அக்டோபர் 2 1836- இல் இங்கிலாந்தில் உள்ள பிளைமௌத்  துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார் .  இந்த கப்பல் பயணம் பல வகையான அனுபவங்களை அவருக்குப் பெற்றுத்தந்தது.

பயணத்தில் ஆய்வு:

      டார்வினின் இந்த பயணத்தின் போது  பல செடிகளை விலங்குகளை ,  படிமங்களை சேகரித்தார் . பல  பழங்குடியினரிடம் உரையாடினார் . தன்னுடைய அனுபவங்களை கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்திற்கு கடிதங்களாக எழுதி அனுப்பி வந்தார்  .

தன் பயணத்தை முடித்துவிட்டு வந்த பின் தான் செய்து வந்த பலவற்றையும் பதப்படுத்தினார் . அதைக் கொண்டு பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்தார்


சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 1859 -ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று ஆய்வு முடிவுகளை நூலாக எழுதித் தொகுத்து வெளியிட்டார். “ இனங்களில் தோற்றம்”  (origin of species) என்னும் அந்த  நூலில் கீழ்வரும் புரட்சிக்கர கருத்துக்களை தெரிவித்தார்

1. உலகெங்கும் உள்ள உயிர்களில்  மாறுபாடுகள் காணப்படுகின்றன
2. உயிர்களின் பெருக்கம் அளவிலாது இருக்கின்றது
3. அனைத்து உயிர்களும் வாழ்வதற்காகப் போராடுகின்றன .   (Struggle  for existence- வாழ்வதற்கான போராட்டம்)
4. அத்தகைய  போராட்டத்தில் தகுதியுள்ளவை எஞ்சி  வாழ்கின்றன.(Survival of Fittest –வல்லன வாழும் )  
5. பயனுள்ள மாறுபாடுகள் பரம்பரையாக உயிர்களால் காப்பாற்றப்படுகின்றன

இவையே அவர் புத்தகத்தின் சாரம் .  இதற்கு அடிப்படையாக இயற்கை மற்றும் செயற்கை தேர்வை குறிப்பிட்டார்

செயற்கை தேர்வு :

 அவரின் மாமனார் வீட்டில் புறாக்களையும் சில வீட்டு விலங்குகளையும் வளர்த்து வந்தனர் . அவை இனப்பெருக்கம் செய்து புதிய  இனங்களையும்  புதிய  வகைகளையும் உண்டாக்குவதை கண்டார்

இவற்றில் நல்ல நிறம் , பருமன் ,  அதிக முட்டையிடும் தன்மை போன்ற நல்ல குணங்கொண்டவைகளையே  தேர்வு செய்து அவற்றை இனப்பெருக்கம் செய்தனர்.  இன வகையை மேலும்  மேம்படுத்தவும் , புதிய வகைகளை உண்டாக்கி  பயன்படுத்தவும்  மேற்கொள்ளும் இம் முறையை செயற்கை தேர்வு முறை என்று அழைத்தார்

இயற்கைத்தேர்வு கோட்பாடு:

செயற்கை முறையில் மனிதன் எப்படிப் புதிய வகைகளையும் இனங்களையும் உண்டாக்கினானோ அதேபோல் இயற்கையிலும் இது போன்ற  தேர்வுகள் நடக்கின்றன என டார்வின் கருதினார்  

உயிரினங்களிலிருந்து வேறு வகையோ , இனங்களை எப்படி உண்டாகிறது  என்பதை டார்வின் விளக்கி இருக்கிறார் . வெப்பம் குளிர், மழை ,  உணவு பற்றாக்குறை , பிற விலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றை உயிரினங்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன டார்வின் கூறுகிறார்  

சூழ்நிலை மாறும் போது அதற்கு ஏற்ப எந்த உயிர் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ அவையே உயிரோடு எஞ்சி நிற்கின்றன.  மற்றவை அழிந்துவிடுகின்றன . எவை சூழ்நிலைக்கு ஏற்ப எஞ்சி உயிர்  வாழ்கின்றனவோ அதை இயற்கை தீர்வு என்கிறார் டார்வின் .  தகவமைப்பு ஆற்றல் என்பது உயிரினத்தின்  உடலுறுப்பு அமைப்பில்  ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மூலமாக நிகழ்கிறது.  தகவமைப்பு என்பது மரபு வழியாக அடுத்த தலைமுறைக்கு செல்கிறது . இயற்கைத்தேர்வு வாயிலாக உயிரின வகைகளின் நிகழ்கிறது என்பதை டார்வின் கண்டறிந்தார்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி:
      ஓர் உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினமாக பரிணமிப்பதற்குள்  இடைப்பட்ட நிலையிலான  வடிவமுடைய வகைகள் உண்டாகின்றன.   மனிதனும் மனிதகுரங்கும் 70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரியத் தொடங்கின.  இன்று  மனித இனத்துக்கும் வாலிலாக் குரங்கு இனத்திற்கும் உள்ள உறுப்புக்கள், கருவுறும் முறை , பாலூட்டும் முறை ஆகியவற்றிற்கு நிறைய ஒற்றுமை உள்ளதை  அவர் கண்டறிந்து , அவையே மனித இனத்தின் முன்னோடி என நிறுவினார். இன்று மனிதனோடு மனித குரங்குகளும் இருக்கின்றன . மனிதக் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கைகளை பயன்படுத்தத் தொடங்கிய மனிதன் (Homo Erectics ) தோன்றினான்.  18 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய மனிதன் ஹோமோ எப்படித் தோன்றினான் நியாண்டர்தால் மனிதன் 2 ,50,000  முதல் 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் வரை வாழ்ந்தான் . குறிப்பாக ஐரோப்பாவில் வாழ்ந்த இந்த  நியாண்டார்தால்  மனிதனின் எலும்புகள் டி.என்.ஏ வை (D.N.A) ஆய்வு செய்ததில் நியாண்டர்தால் மனிதன் இன்றைய மனிதனிலிருந்து  வேறுபட்டவன்  என்பது உறுதியாகி உள்ளது .

      70 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை 340 சிசி அளவில் மட்டுமே இருந்தது . இன்றைய மனிதன் (Homo sapiens ) மூளை அளவு 1300 முதல் 1500 சிசி என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது . இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழல்களில்  ஏற்படும் மாற்றங்கள் உயிரினத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கினார்
finch bird

      டார்வின் தனது கருத்துக்கு ஆதாரமாக தன்னுடைய பீகில் கப்பல் பயணத்தில் கிடைத்தவற்றை காட்டினார். கார் பகோஸ் தீவில் (Finch ) எனப்படும் குருவி போன்ற ஒரு பாடும் பறவையின் 14 இனங்கள் இருப்பதை கண்டார் .அவை பலவகைகளில் ஒத்து இருப்பினும் அவை தம்முடைய சூழல் ,உணவு  இவற்றிற்கு ஏற்ற வகையில் தன்  அலகுகளை  (மூக்கு –Beaks )  தகவமைத்து கொண்டுள்ளன  என்பதை கண்டார் .அவற்றின் மூக்கினை கொண்டே  14 இனங்களையும் பிரித்தார் . அதே கார்பகோஸ் தீவில் 400 ஆண்டுகால ஆமையைக் கண்டார் . ஆமைகளும் ஒவ்வொரு தீவுகளிலும் ,ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறாக இருப்பதை கண்டார் .ஒரு ஆமையை பார்த்தவுடன் எந்த தீவினை சேர்ந்த ஆமை என்பதை கண்டு பிடிக்க முடியும் என்று வகைப்படுத்தி காண்பித்தார் . ஒரே விலங்கு தீவுகளின் அமைவிடங்களுக்கு ஏற்ப  வெவ்வேறு மாற்றத்துடன் இருந்தது . ஒரு குறிப்பிட்ட தீவிலுள்ள ஆமையின் கறி சுவையாக இருக்க மற்றொரு தீவில் உள்ள ஆமைகளின் கறி சுவை குறைவாக இருப்பதைக் கண்டார் . எனவே ,  ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விலங்கும் தன் இடம்  சூழலுக்கேற்ப தன்னை தகவமைப்பதாலேயே  பல புதிய இனங்கள் உருவாகின்றன என்பதை விளக்கி அவற்றை தம் நூலில் எழுதி வெளியிட்டார் .







புத்தக வெளியீடு :
      டார்வின் தான் திரட்டிய தகவல்களை எல்லாம் தன் “இனங்களின்  தோற்றம்” என்கிற நூலில் எழுதி இருந்தார் . அவர் அந்த புத்தகத்தை 1859 இல் வெளியிட்டார் . அப்போது அவரது வயது 51 . இயற்கைத் தேர்வு மூலம் தான் பரிணாமம்  வந்தது என அப்புத்தகத்தில் வெளியிட்டார் . இது மதக் கோட்பாட்டிற்கு முரணாக  இருந்தது.  ஆனால் அதுதான் தற்போதைய அறிவியல் கோட்பாடாக  ஏற்கப்பட்டுள்ளது .

இவரின் புத்தகங்கள் 1250 படிகள் முதல் பதிப்பாக வெளிவந்தது. அவற்றை பலர் முன்பதிவு செய்திருந்ததால் அவை அனைத்தும் வெளியான அதே நாளில் விற்று தீர்ந்தன. அந்தப் புத்தகம் தொடர்ந்து பல பதிப்புகளாக வெளிவந்தது.  டார்வின் உயிரோடு இருந்தவரை மட்டும் ஆறு பதிப்புகள் வெளிவந்தன.  அவர்  தான் இறக்கும் வரையிலும் ஆய்வு செய்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.  அவர் தனது 73வது வயதில் ஏப்ரல் 1882-இல் மாரடைப்பால் காலமானார்

புத்தகத்தின் தாக்கம் :

     உயிர்கள் யாவும் ஒரே நேரத்தில் கடவுளால் படைக்கப்பட்டன என்னும்  நம்பிக்கையே  அதுவரை இருந்தது அதை டார்வினின் இந்த புத்தகம் புரட்டிப் போட்டது

இதைப் படித்த மதவாதிகள் பொங்கி எழுந்தனர்.டார்வினை திட்டினார் . அவருக்கு எதிராக கண்டன உரைகளை நிகழ்த்தினர். புத்தகங்களை எரித்தனர். ஆனால்,  இதை நான் எதிர்பார்த்தே இருந்தார் . எனவே அவர் பின் வாங்கவில்லை .

மாறாக மற்றொரு புறத்தில் அறிவியல் உலகத்தார்  டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையில்  உள்ள உண்மையை உணர்ந்தனர்.  அவரைப் பாராட்டினர்.  உயிரியல் வல்லுநரான பேராசிரியர் ஹக்ஸ்வி டார்வினின்  கருத்தால் பைபிளில் உள்ள படைப்புக் கோட்பாடு நொறுக்கப்பட்டுள்ளதை பாராட்டி கடிதம் அனுப்பி இருந்தார்

         1864 இல் இங்கிலாந்தின் மிக உயரிய விருதான ராயல் சொசைட்டியின் “காப்ளி விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவர் உயிருடன் இருந்த போதே பல இடங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்.

சுவையான தகவல்கள் சில :

மருத்துவக் கல்லூரியில் பயிலும்பொழுது டார்வின் இரண்டு அறுவை சிகிச்சைகளை  நேரில் பார்த்தார் . அந்த காலத்தில் மயக்க மருந்து இல்லை.  மயக்கம் மருந்து  இல்லாமலேயே  அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது வலியால் நோயாளி அலறி துடித்தது , டார்வினுக்கு பயத்தையும் மன உளைச்சலையும்  ஏற்படுத்தியது ஆகவே மருத்துவ படிப்பை  பாதியிலேயே நிறுத்தினார்

v டார்வினின்  பீகிள் கப்பல் பயணத்தின்  மொத்த காலம் 5 ஆண்டுகள் அதில் உலகின் மூன்றில் இரண்டு பகுதி நிலப் பகுதிகளை ஆய்வு செய்தார்

v டார்வின் பயணம் மேற்கொண்ட பீகிள் கப்பலில் - ஒரு பாய்மரக்கப்பல் ஆகும், அந்த காலத்தில் அவை  தான் இருந்தன

v டார்வின் எழுதிய புத்தகத்தின் முழு பெயர் “On the origin of species by means of natural selection process in the struggle for life”  தமிழில் “இனங்களின் தோற்றம்” இயற்கைத் தேர்வு மூலம் இனங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் ஆற்றல் வாய்ந்த மிகுந்த இனங்களின்  நிலைபேறு” என்பதாகும்

v டார்வின் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில்  “இனங்களின்  தோற்றம் “ “மனிதனுடைய பாராம்பரியம்” (Descent of Man )  கடல் பயணம் தொடர்பான மூன்று  புத்தகங்கள் (The Voyage of the beagle)  போன்றவை புகழ்பெற்றவை  

v இசையைப்  பற்றியும் டார்வின் புத்தகம் எழுதி உள்ளார்.

v அவர்  இந்த பரிணாம வளர்ச்சி தத்துவத்தையும் அதன் பரம்பரை கடத்தலை பற்றி  வெளியிடும்போது ஜீன் (Gene) சொல்லோ டி.என்.ஏ வோ (D.N.A) கண்டுபிடிக்கப்படவில்லை

v டார்வின் தன் இளமைப் பருவம் முதல் நோயால் அவதிப்பட்டார். பீகில்  கப்பல் பயணத்தின் போது ஒன்றரை ஆண்டு முடிவில் கடுமையான காய்ச்சலால் படுத்த படுக்கையானார் . இவருடன் வந்த  இளைஞர் காய்ச்சலால் இறந்தே போனார் . கப்பலில்  வந்த பலரும் பாதிப்படைந்தனர்.  ஆனாலும் அவர் அதன்பின் தொடர்ந்து 31/2 ஆண்டுகள் பயணித்தார் . தென் அமெரிக்கா காடுகளில்   இருந்தபோது சிறிய பூச்சிகள் இவரை கடித்ததால் பல  நோய்கள் உண்டானது . டார்வினுக்கு தொடர்ந்து வாந்தி எடுத்தல்,  கடுமையான கட்டிகள் ,  தோல் வியாதிகள் பயத்தால் நடுங்குதல் (மேடையில் பேசும் போதும்) போன்ற இருபதுக்கும் மேற்பட்ட வியாதிகள் இருந்தன .

v  40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நோய்களுடன் வாழ்ந்து வந்தார். நோயால் அவர் முதுகு வளைந்து  போயிற்று.  டார்வின் தன் உடல் நலம் குன்றி இருந்த காலத்தில்  தான் பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்டார்.

v 1859இல் டார்வினின் நூல் வெளியான ஒரு மாதத்தில் அந்த நூலை ஏங்கல்ஸ் படித்தார் . பின்பு அவர் கார்ல் மார்க்ஸ்க்கு  எழுதிய மடலில் “ டார்வின் நூலை படித்துக் கொண்டிருகிறேன் கடவுள் பற்றிய தத்துவத்தில் தெய்வீகப்  படைப்பு என்ற  ஒன்றுதான் இதுவரை திறக்கப்படாமல் இருந்தது அந்த வேலையை டார்வினின் நூல் செய்துள்ளது என்று எழுதியிருந்தார்

v  டார்வின் - தன் வரலாற்று நூலில் நான் பீகிள் கப்பலில் பயணம் செய்த காலத்தில் பைபிளின்  பழைய ஏற்பாடுகள் பற்றி சிந்தித்தேன்.  உலக வரலாறு பற்றிய தவறான கருத்துக்கள் கடவுளை வஞ்சம் தீர்க்கும் வன்கனாளராக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆகியவற்றை வைத்து, பைபிளும் இந்துக்களின் புனிதநூல் போன்று நம்புவதற்கு உரியதன்று. காட்டுமிராண்டிகளின்  நம்பிக்கைகளைக் கொண்டது என்ற முடிவுக்கு வந்தேன் எழுதியுள்ளார்

v டார்வின் தான் கிறிஸ்துவத்தை  விட்டு விலகி விட்டதாகவும் கடவுள் பற்றி கவலை கொள்ளாமல் கொள்கையாளன் (Agnostic) என்றும் தன்னை அறிவித்தார்
மவுண்ட் டார்வின்

v அவர் உயிருடன் இருக்கும் போதே பல இடங்களுக்கு டார்வின்  பெயர் வைக்கப்பட்டது. ஆண்டிஸ் (Andes) மலைப்பகுதியில் உள்ள சிகரத்திற்கு மவுண்ட் டார்வின் என்ற பெயர் சூட்டப்பட்டது . 
டார்வின் துறைமுகம்

v ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கப்பல் துறைமுகத்திற்கு டார்வின் துறைமுகம்  என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவில் அவர் பெயரில் பூங்காக்களும் , பல்கலைக்கழகமும்  ஆரம்பிக்கப்பட்டன. கேம்பிரிட்ஜி-ல் அவர் பெயரில் கல்லூரி துவக்கப்பட்டது  
Rhia Darwini 





Rhino derma Darwini

v பிரேசில் நாட்டில் அவர் பயணிக்கும் போது ஒரு வகையான ரியா பறவைக்கு ( நெருப்புக் கோழி போன்ற வடிவுள்ளது )  ரியா டார்வினி (Rhia Darwini ) என்று பெயரிடப்பட்டது. அதே போல்  சிலி  மற்றும் அர்ஜென்டினா நாட்டில் காணப்படும் ஒருவகையான  பச்சை மற்றும் பழுப்பு நிற கொண்ட தவளையை   கண்டுபிடித்தார்.  அது “ டார்வின் தவளை’’ என்று அழைக்கப்படுகிறது .  இதன் விலங்கியல் பெயர் ரினோ டெர்மா டார்வினி (Rhino derma Darwini)

v டார்வினின் கருத்தைப் போற்றிய பேராசிரியர் ஹக்ஸ்வி டார்வினின் கருத்துக்கள் பற்றிய விவாத அரங்கில்  பங்கேற்றார்.  அப்போது டார்வினுக்கு  எதிராக ஒரு கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் வில்பாபோர்ஸ்  என்பவர் பேசினார். “ ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுவதாக டார்வின் கூறுவது உண்மை எனில் ஹக்ஸ்வி  வால் இல்லாக் குரங்கிலிருந்து தோன்றினாரா ? பாட்டன் வழியிலா ? பாட்டி வழியிலா ? என கேலி செய்தார்.  அடுத்து பேச வந்த ஹக்ஸ்வி “மேதாவியான’’ பாதிரியாரை என் முன்னோராக பெறுவதைவிட வாலில்லாகக் குரங்கை  என் மூதாதையாக  பெறுவதில்  பெருமை அடைகிறேன் என்றார் . அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது.  கருத்துக்களால் வெல்லமுடியாமல்  கேலி பேசிய  பாதிரியார் வெட்கித் தலைகுனிந்தார்

v  டார்வின் தன்னுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை  வெளியிட்டபோது குரங்கு உடலில் டார்வின் தலையை வரைந்து  கேலிச்சித்திரம் தீட்டினர். அதைக் கண்டு டார்வின் கோபம் அடையவில்லை. மாறாக தலையை சரியாக வரைந்தவர்கள்  அதற்கேற்றவாறு உடலை வரையாமல் விட்டுவிட்டனர் என்றார்.

 டார்வினின் வெற்றி :


            டார்வின் ஏப்ரல் 19ஆம் தேதி 1882- இல் மறைந்தார் ஆனால் அவர் புகழ் மறையவில்லை . அவர் ஏற்றிய ஒளி உலகெங்கிலும் ஆராய்ச்சியாளர்களிடையே இன்றளவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  எனவே அவர் மறைந்தவுடன் அவர் குடும்பத்தினர்அவரை அவரது டவுனி (Downe)  நகரில் அடக்கம்  செய்ய நினைத்தனர். ஆனால் அறிவியல் அறிஞர்களோ அதனை மறுத்து அவரது உடலை  பல்வேறு முக்கிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள வெஸ்ட் மினிஸ்டர் கல்லறையில் அடக்கம் செய்தனர்.  அங்கு அவர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.  அந்த காலத்தில் இவ்வாறு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட அரசு சாராதவர்கள்  மிகச் சிலரே என்பது குறிப்பிடத்தக்கது.

       டார்வின் மறைந்தாலும் அவரின்  கருத்துக்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என சொல்லலாம்.1925 -இல் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ஜாண்டிஸ் கோப்ஸ் என்னும்  பள்ளி ஆசிரியர் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை பயிற்றுவிக்கிறார் என்பதற்காக வழக்கு போடப்பட்டது.  டார்வின் கொள்கையை போதிப்பது குற்றம் என்ற தீர்ப்பை அமெரிக்க நீதிமன்றம் அப்போது வழங்கியது.  குரங்கு வழக்கு(Monkey Trial ) என்று அமெரிக்க பத்திரிகைகளால் இவ் வழக்கு வர்ணிக்கப்பட்டது . பின் கால மாற்றத்தின் காரணமாக இத்தீர்ப்பு  1967 இல் திரும்பப் பெறப்பட்டது

        அதே போல பைபிளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி தத்துவம் உள்ளது என்று அதை கிறிஸ்துவ மதத் தலைவர்கள்  எதிர்த்தனர். ஆனால்  செப்டம்பர் 2008 -இல் இங்கிலாந்து சர்ச் கீழ்க்கண்டவாறு எழுதியது.  “ உங்களை நாங்கள் தவறாக புரிந்து கொண்டதற்காகவும்,  உங்கள் கருத்து தொடர்பாக எங்கள் எதிர்வினை தவறாக இருந்ததற்கும், மற்றவர்கள் இன்றளவும் உங்களை தவறாக புரிந்து கொள்ள தூண்டுவோராக  இருந்ததற்கும்  நாங்கள் மன்னிப்பு கேட்பதற்கு  உங்கள்  பிறந்த நாள் பொருத்தமானதாக உள்ளது” என்று எழுதினர். ஆம், டார்வின் பிறந்த 200 ஆண்டுகள் , “இனங்களின் தோற்றம் “ புத்தகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டது எனினும் பழமைவாதிகளும் மதவாதிகளும் அறிவியல்  முன் மண்டியிட்டே ஆக வேண்டும் என்பதற்கு சான்று அளித்து நிற்கின்றது டார்வின் அவர்களின் பிறப்பும் பரிணாமத்தத்துவமும் .

இன்று உலகெங்கும் 99.8 % அறிவியல் அறிஞர்கள் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை ஏற்றுள்ளனர் என்பதே  டார்வினின் வெற்றியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக