வியாழன், 20 மார்ச், 2014

குஷ்வந்த்சிங் இறப்பு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா ?



‘’கடவுளையோ மனிதனையோ விமர்சித்த, விட்டு வைக்காத ஒரு மனிதர் இங்கே உறங்குகிறார். உங்கள் கண்ணீரை அவருக்காக வீணாக்கவேண்டாம். அவர் ஒரு குழந்தை. மோசமான விஷயங்களை எழுதுவதைm அவர் ஒரு தமாஷாகக் கருத...ு பவர். ஒரு துப்பாக்கியின் மகனான அவர், இறந்து போனதற்கு கடவுளுக்கு நன்றி.’’ என்று தன் கல்லறையின் மீது எழுதப்பட வேண்டிய வாசகத்தை(Ephitab) தானே எழுதிய மாபெரும் சிந்தனையாளர் தான் குஷ்வந்த்சிங்

திராவிடர்கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி .வீரமணி அவர்கள் தனது வாழ்வியல் சிந்தனையில் குஷ்வந்த்சிங் அவர்களை பற்றி குறிப்பிடும் போது அவர் பாலைவனத்தில் தோன்றிய ஒரு சோலை (ஓயாசிஸ்)என்று குறிப்பிடுகிறார் .புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளராகவும் ,நாவல் ஆசிரியராகவும் அறியப்பட்ட குஷ்வந்த்சிங் இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கி சிறப்பிக்கப் பட்டவர் . சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும்

குஷ்வந்த் சிங் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒருவர் ((Agnostic) . முற்போக்கு சிந்தனையாளர் - மனித நேயர் - மதவெறி மனிதநேயத்தைக் கொல்லும் என்பதால் அதனைக் கடுமை யாக எதிர்த்தவர். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது), என்ற இடத்தில் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர், ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ்பெற்று விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல அழகான கட்டிடங்களை கட்டியுள்ளார். குஷ்வந்த் சிங் தனது சொந்த ஊரை பற்றி குறிப்பிடும்போது இந்து, மற்றும் சீக்கிய குடும்பங்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையினரே. என்றாலும் எந்த மதக்கலவரமோ, வகுப்புக் கலவரமோ எதுவும் ஏற்படவே இல்லை. மக்கள் நல்லிணக்கத்தோடும் நல்லுறவோடும்தான் வாழுகிறார்கள்!
அந்தக் கிராமத்திற்கு பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நான் சென்றபோது, எந்தவித மாச்சரியமும் இன்றி அன்பாக, பதாகைகளை வைத்து எவ்வளவு பெருமையாக என்னை வரவேற்றார்கள் தெரியுமா? என் மனதை மிகவும் நெகிழச் செய்ததாக அது இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
அவர் எழுத்தாளராக தன் வாழ்கையை தொடங்கிய போது , தன்னுடைய முதல் நாவலை “மனோ மஜ்ரா” என்ற பெயரில் எழுதினார். எழுதிமுடித்த பின்னரும் இந்த புத்தகம் சில காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பிறகு, “கரூவ் ப்ரெஸ்” என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு “மனோ மஜ்ராவை” அனுப்பிவைத்தார். அந்த போட்டியில், முதல் பரிசை வென்ற அந்த நூல் பிறகு “பாகிஸ்தான் போகும் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. இன்றுவரை போற்றத்தக்க ஒன்றாக கூறப்படும் இந்த நாவலின் கதை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட உன்னதப் படைப்பாகும். பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய் பழகியவர்கள் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதை அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ சமூகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டி, 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை “இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி” என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில், சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் “வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்” அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. 1980 முதல் 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், நகைச்சுவை புத்தகங்களையும் படைத்துள்ளார். குஷ்வந்த்சிங் நகைச்சுவைகள் மிகப் பிரபலமான ஒன்று .ஆனால் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இன்று நாட்டை உலுக்கும், அரித்துத் தின்னும் மதத் தீவிரவாதம் பற்றி மிகச் சரியான எச்சரிக்கையாக, எழுத்தாளர்களுக்குக் கலங்கரை வெளிச்சமாக நின்று அறிவுறுத்தியவர் .
அவரிடத்தில் மதம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு அவர் எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. மதம் என்பது மனத்தின் மாயை. நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த வாழ்க்கையின் முடிவு பற்றி ஒன்றும் தெரியாது. இவைபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் மதத்தைப் பற்றி பேசுவதால் என்ன பயன்? விளையப் போவதும் என்ன? என்னைப் போன்று கடவுளை மறுப்பவன் மதத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? என்றார் . மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? என்கிற கேள்விக்கு இல்லை. மறுபிறப்பு என்பது படுஅபத்தமான விஷயம். எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. நாம் எங்கிருந்து வந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பிறகு நாம் எங்கே போகப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது! என்றார் .
அவரிடத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி வாழ்க்கையில் நீங்கள் கவலைப்படும் விஷயங்கள் அதிகமாக இல்லை என்பது மட்டும் நிச்சயம். எந்த ஒரு விஷயத்தையாவது வேறு விதமாகச் செய்திருக்கலாமே என்று நீங்கள் கருதியவை உண்டா? என்று கேட்கப்பட்டது அதற்கு குஷ்வந்த் சிங் பதில் சொன்னார் ‘’ சட்டத் தொழிலில் நான் பல ஆண்டு காலத்தை வீணாக்கிவிட்டேன். இந்த மண்ணில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மதத் தீவிரவாதிகளுக்கு எதிராக இன்னமும் அதிகமாக எழுத வில்லையே என்பது எனது மற்றொரு வருத்தம். அவர்கள் கடுமையாகக் கையாளப்படவேண்டியவர்கள்.நமது நாட்டில் வலதுசாரி பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன். இந்த அழிவுச் சக்திகளிடமிருந்து நம் நாட்டை நாம்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் பதில் கூறினார் .
வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்தபொழுதும், அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதரான குஷ்வந்த் சிங் நம்நாடு இதுவரை கண்ட பிரதமர்களில் மன்மோகன் சிங் தான் மிகவும் நேர்மையான பிரதமர் என்று பாராட்டி உள்ளார். 1999ம் ஆண்டு தெற்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட போது மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சாரத்திற்கு டாக்சிகளை வாடகைக்கு எடுத்து செல்வதற்காக குஷ்வந்த் சிங்கிடம் ரூ. 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வி அடைந்த பின் அந்த பணத்தை தான் பயன்படுத்தவில்லை என்பதால், அதனை அப்படியே குஷ்வந்த் சிங்கிடம் மன்மோகன் சிங் திருப்பி கொடுத்துள்ளார்.

இதனை தனது புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ள குஷ்வந்த் சிங் இத்தகைய நேர்மையான செயலை எந்த ஒருஅரசியல் தலைவரிடமும் காண முடியாது என்று குறிப்பிட்டு மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டி உள்ளார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் காட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சிறந்த பிரதமர் என்று குஷ்வந்த் சிங் புகழ்ந்துள்ளார்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து, ராமர் கோயிலை அயோத்தியில் கட்டியே தீர்வது என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் இறுதிக்காலம் (தி எண்டு ஆப் இந்தியா) எனும் நூலை எழுதினார்.இந்தியாவை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை குஷ்வந்த் சிங்கிற்கு இல்லை
அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி எப்போதுமே உங்கள் வயது பொதுவாக விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. தனிமையில் இருக்கும்போது உங்கள் மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திப்பதுண்டா?
குஷ்வந்த் சிங் பதில் சொன்னார் ஆமாம். எனது மரணத்தைப் பற்றி அடிக்கடி நான் நினைக்கிறேன். இறந்துபோன எனது நண்பர்களை யெல்லாம் நினைத்து அவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று வியப்படைவேன்.நமது இல்லங்களில் இறப்பைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்று ஆச்சரியப் படுவேன்.எவருமே தப்பிக்க இயலாத உண்மை நிலைகளில் அதுவும் ஒன்று. இறப்பு கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்ற சமணமதத் தத்துவத்தை நான் நம்புகிறேன் என்றார்.மதவெறி தலைத்தூக்கி உள்ள இந்த கால கட்டத்தில் குஷ்வந்த் சிங் இறப்பு அவர் விரும்பிய வண்ணம் கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இல்லாமல் மனிதநேயர்களுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாய் மாறிப்போனது

''கல்வி கொள்ளையர்களின் நூதன மோசடியும் அரசின் கடமையும் ‘’



கோழிப்பண்ணைகள் போல் நாமக்கல் ,சேலம் ,தருமபுரி ,கிருட்டினகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் 9 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 10 ஆம் வகுப்பு படத்தை இரண்டு ஆண்டுகள் நடத்துவதும் ,11 ஆம் ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 12 ஆம் வகுப்பு படத்தை இரண்டு ஆண்டுகள் நடத்துவதும் வழக்கமாக கொண்டிருந்தனர் ,இப்படி மாணவர்களை இவர்கள் பயிற்றுவிபபதினால் அரசு பள்ளி மாணவர்கள் இவர்களுடன் போட்டி போட முடியாமல் திணறுவதும் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் அதிகமதிப்பெண் எடுத்து உயர் கல்விக்கு செல்வதும் அதைவைத்து இந்த கல்வி வியாபாரிகள் கொள்ளை அடித்து வந்ததும் அனைவரும் அறிந்ததே .
இந்த ஆண்டு அரசு உத்தரவுப் படி 11 ஆம் வகுப்பிற்கான வினாத்தாள் அரசால் தயாரிக்கப்பட்டு மேற்படி கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது .ஒரு சில பள்ளிகள் அவசர அவசரமாக 11 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு மட்டும் மாணவர்களை தயார் செய்தது .இன்னும் ஒரு சில பள்ளிகள் காலையில் வந்த வினாத்தாளை மாணவர்களிடம் கொடுத்து மதியத்திற்குள் நாற்பது ஒரு மதிப்பெண் வினாக்களை மட்டும் மனப்பாடம் செய்ய வைக்கின்றனர் .இன்னும் சில கிரிமினல் பள்ளிகள் மாணவர்களிடம் தெரிந்ததை எழுதுங்கள் உங்களை எப்படி தேர்ச்சி அடைய வைப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்கின்றனர் .ஆனால் அவர்கள் மட்டும் மாற தயாராய் இல்லை
இந்த நிலையை மாற்ற ஏழை எளிய கிராமத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மாணவனும் இந்த மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் எனில் 11 ஆம் வகுப்பு தேர்வையும் அரசே நடத்தி அரசே விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேர்வு தாளை திருத்தி அந்த மதிப்பெண்களையும் 12 ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களையும் இணைத்தே உயர் கல்விக்கு தேந்தெடுக்க வேண்டும் இதை அரசு செய்ய முன் வருமா ?