சனி, 8 ஆகஸ்ட், 2020

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஆண்களுக்கான நீதிநூல் ! “உங்கள் மகனிடம் சொல்லுங்கள்”


நியாண்டார் செல்வன் – ஒரு மந்திர சொல் !

ஆம் ! முகநூலில் ஆரோக்கியம் –நலவாழ்வு குழுமத்தை பின் தொடரும் ஏறக்குறைய ஆறு இலட்சம் பேருக்கு அந்த பெயர் ஒரு மந்திரசொல்லாகவே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இந்த கொங்கு நாட்டு தமிழர் தன் வாழ்வில் கண்டுணர்ந்த உணவு பழக்கத்தை மருத்துவ அறிவியல் சான்றுகளுடன் முகநூலில் எழுத ஆரம்பித்து இன்றைக்கு ஒரு பெரும் இயக்கமாக ஜாதி ,மதம் ,மொழி ,அரசியல் ,நாடு என எல்லா எல்லைகளையும் தாண்டி இயங்கி கொண்டிருக்கிறது

 

மொழி உணர்வின் அடிப்படையில் , அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் கடவுள் ,மதம் ,ஜாதி , ஆத்திகம், நாத்திகம், இனம் என பலவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சமூகம் உணவு குறித்தும் உடல் நலம் குறித்தும் சிந்தித்து ஒருங்கிணைவது தமிழ் சூழலில் வியப்பாக இருக்கிறது.இந்த மாற்றத்தை நிகழ்த்தியவர் தான்  நியாண்டார் செல்வன் .பேலியோ உணவு என அழைக்கப்படும் தொல்லுணவை தென் இந்தியர்களின் உணவு பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர் .

 

பேலியோவை தொடர்ந்து மினிமலிசம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். 2016 ஆம் ஆண்டு அவர் எழுதிய “பேலியோ டயட்” என்னும் நூல் விற்பனையில் சரித்திர சாதனை படைத்தது .அதன் பின்னர் குமுதம் இதழில் எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “வாழ்க கொழுப்புடன்” பெரும் வரவேற்பை பெற்றது .இப்போது “உங்கள் மகனிடம் சொல்லுங்கள்” என்னும் நூலை அமேசான் கிண்டில்-லில் மின் நூலாக வெளியிட்டுள்ளார் . நூல்  வெளியாகி 12 மணி நேரத்திற்குள் உலகின் மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூல்களின் விற்பனையை தாண்டி முதலிடத்தில் வந்தது. இன்னும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது . ஆண் –பெண் உளவியல் சிக்கல்கள் குறித்தும் ஆண்-பெண் உறவு எத்தகையதாக இருத்தல் அவசியம் என்பதையும்  தான் படித்த செவ்விலக்கியங்களில் இருந்தும் தன் அனுபவ அறிவிலும் Evolutionary psychology துறை காட்டும் கோணத்திலும் இந்த நூலை எழுதி உள்ளார்

 

ஆண் - பெண் உளவியல் குறித்து உளவியலாளர்கள் நூல் எழுதி இருப்பதை அறிந்திருக்கிறோம், மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்து கார்ப்பரேட்  சாமியார்கள் பேசுவதையும் எழுதி வருவதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் ஒரு உளவியலாளர் நிலையில் இருந்து ஆண்களின் உளவியல் குறித்தும் ,பதின் பருவ சிக்கல்கள் குறித்தும் ,வாழ்வில் வெற்றி பெற தேவையானது குறித்தும் ,மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை என்பது குறித்தும் சின்ன சின்ன உதாரணங்களை காட்டி சுவைபட நியாண்டார் செல்வன் விளக்கி உள்ளார்

 

ஆண்மை என்றால் என்ன ? ஆண்மையின் இலக்கணம் என்ன ? என்கிற கேள்விக்கான பதிலில் இருந்து தமது நூலை தொடங்கி ஆண் ஆதிக்கம், ஆண் பெண் உறவு, பாலியல் சுதந்திரம், நட்பு காதல், திருமணம்,கணவன் மனைவி உறவு,தொழில் , உணவு , உடல் ஆரோக்கியம் , குடும்ப சிக்கல்கள் , முதுமை என பலவற்றை குறித்தும் எழுத்தின் வடிவத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார் . பல இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும்   நீட்சேயின் தத்துவங்களையும்  திருக்குறளை ஒத்த  இலக்கிய நூல்களின் தரவுகளையும்    சுட்டிக்காட்டி இருக்கிறார்.  கிரேக்க கதைகளை ஆங்காங்கே உதாரணம் காட்டி உள்ளார் .

 

ஆண்களை குறிவைத்து அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காண எழுதிய நூல் என்பதால் பெண்களுக்கு இதை படிக்கையில் இது நமக்காக எழுதபட்டது அல்ல என்பது போல் தோன்றலாம் என அஞ்சினேன். ஆனால் கட்டுரைதொடர் முகநூலில் வெளிவருகையில் ஆர்வத்துடன் அதை பகிர்ந்து, கருத்திட்டு வாழ்த்தியவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பலரும் தம் வாழ்வின் முக்கியமான ஆண்களான மகன், கணவ்ர், சகோதரன் போன்றோரை கட்டுரையில் டேக் செய்ததையும் காணமுடிந்தது. அது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.  பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் நல்லபடி வாழ, ஆண்வர்க்கத்தை தலைமை பொறுப்பு மிக்கவர்களாக, ஆளுமைத்திறன் மிக்கவர்களாக ஆக்குவது அவசியம். ஆண்கள் தம் குறைகளை களைந்து மேலே உயர்ந்தால் அது அவர்களின் மகள்கள், மனைவியர், சகோதரியர், தாய்மார்கள் என பெண் இனத்துக்கே பயனளிக்கும் விசயம். ஆக இதை ஒருவிதத்தில் தமிழில் ஆண்களுக்கு எழுதபட்ட முதல் நீதிநூல் எனவும் கொள்ளலாம் என்று தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன் .

 

அவ்வாறே பதின்பருவத்தை தொடும் இளைஞனுக்கு அவனுக்கு புரியும்படி வகுப்பு எடுப்பதை போல் எழுத்தில் ஒரு உரையாடல் நிகழ்த்தி இருக்கிறார். இளைஞனை  குறிவைத்து எழுதப்பட்டாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .

 

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்

என்று பதின் பருவ மன நிலையை விவரித்து கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவதை போல  அண்மைகாலங்களில்  பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் ஏற்படும் பதின் பருவ காதல்  மாணவர்களுக்கு   கவன சிதறலாக மாறுவதுடன்  மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது கல்வியில் அவர்கள் அடையவேண்டிய இலக்கிலிருந்து அவர்களை திசை மாற்றுவதுடன் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்குமான உறவில் பெரும் இடைவெளியையும் சச்சரவையும் ஏற்படுத்துகிறது .இது குறித்து இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது

 உலகில் மனித இனம் தோன்றிய ஆரம்ப காலகட்டத்தில் தாய் வழிச்சமூகமே இருந்து வந்ததை வால்கா முதல் கங்கை வரை நூலில் ராகுல் சாங்கிருத்தியாயன் குறிப்பிடுவார் பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு முக்கிய காரணம் அவை தோன்றிய சமுதாயத்தில் தாய்வழி முறை நிலவியதே என்று பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள் நூலாசிரியரும் ஆண்,பெண் சமம் அல்ல.  பெண் பிறப்பால் ஆணைவிட உயர்ந்தவள்  மேன்மை அவளுக்கு பிறப்பால் வருகிறது என்பதுடன் வலுவானது ஆண்மை  வீரம் நிரம்பியது பெண்மை  வலிமையால் வீரத்தை வெற்றி கொள்ள முடியாது என்றும் பாலியல் சுதந்திரம் உண்மையில் ஆண்களுக்கு அவசியமில்லை, பெண்களுக்கு தான் அவசியம் என்பதையும் கூறி விளக்குகிறார் 

அதே நேரத்தில் ஆணாதிக்கவாதி என்கிற தலைப்பில் அவர் முன்வைத்துள்ள கருத்துக்கள் சிலவும் எடுத்துக்காட்டுகள் ஒன்றிரண்டும் சில நெருடல்களை உருவாக்குகிறது .


“ஆணாதிக்கவாதி என அவர்களை மற்றவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் அவர்களோ காபி வைக்க கூட மனைவியை நம்பியிருப்பார்கள். தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? ஆயுள் முழுக்க அவன் பெண்களை நம்பியே இருக்கிறான்

 

ஆணாதிக்கம் என சொல்லபடுவது முழுக்க அதிகாரத்தை பெண்களின் கையில் ஒப்படைக்கும் விசயமாகவே உள்ளது. இது போலியான ஆணாதிக்கம்.  உண்மையான ஆணாதிக்கம் என்றால் என்ன? பலரும் நினைப்பதுபோல் ஆணாதிக்கம் தவறான விசயம் அல்ல. ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல.

 

ஆண்மை அதன் இயல்பிலும், பெண்மை அதன்இயல்பிலும் இருக்க அனுமதிக்கும் சமூகங்களிலேயே உண்மையான சமத்துவம் நிலவ இயலும்.

 

நூலின் வெவ்வேறு பக்கங்களில் இத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தாலும் நூலை  திரும்ப நினைவு கூர்ந்து பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தோன்றுகிறது. இன்றைக்கும் கிராமங்களில் அடித்தட்டு மக்களில் பெண்கள் வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவதும் ,அவளின் கணவன் வெட்டியாய் ஊரை சுற்றி விட்டு குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமைபடுத்துவதும் பார்க்கிறோம் .தனது அன்றாட அத்தியாவசிய தேவைக்கு கூட மனைவியை சார்ந்து இருக்கிறவன் .ஆண் என்கிற காரணத்தினாலேயே பெண்ணை அடிமையாக நடத்துவதை பார்க்கிறோம் . தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? என்று நூலாசிரியர் கேட்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை

 

உழைக்கும் கிராமத்து மக்களின் வாழ்வியல் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாமல் மேல்தட்டு குடும்பங்களின் சூழலில் இருந்து ஆணாதிக்கத்தை அணுகி உள்ளாரோ என்கிற அய்யம் எழுகிறது .அதே போல் ஆண் பெண் உறவுகளில் தோழமையை வரவேற்கும் நூலாசிரியர் சமநிலை விரும்பத்தக்கது அல்ல என்கிறார். பெண்களுக்கு சம உரிமை கொடுத்து தோழமை பாராட்ட கற்று தருவது தான் இந்த நூலின் அடிப்படை நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் ஆனால் ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல என்று சொல்லும்போது தேவையற்ற ஒரு குழப்பம் ஏற்படுவதாக உணர்கிறேன்

 

அதே போல் தனித்தனி கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல் என்பதால் படிக்கும்போது அதன் தொடர்ச்சி விடுபடுகிறது .அதே போல் எழுத்து பிழைகளை களைய  கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் .இப்படி சின்ன சின்ன குறைகள் எனக்கு தென்பட்டாலும் ஓர் உயரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட இந்த நூல் அந்த நோக்கத்தை பெருமளவு நிறைவு செய்திருக்கிறது.

 

பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் பேசியிருக்கிறது இந்த நூல். இன்றைய தலைமுறை அவசியம் இந்த நூலை படிக்க வேண்டும் . அல்லது இந்த நூல் பேசியிருக்கிற செய்திகளை இன்றைய தலைமுறையோடு பேச வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நூல் குறித்த அறிமுகக் கூட்டங்கள் , நூல் குறித்த விவாதங்கள் , சிறப்பு கூட்டங்கள்  நடத்தி இளம் தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். நியாண்டர் செல்வன் தேரின் வடத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் .எல்லா ஊர்களுக்கும் எல்லா தெருக்களுக்கும் தேரை இழுத்து செல்வது நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி . அதற்கு முதல் கட்டமாக நூலை வாங்கி அவசியம் படியுங்கள் !