புதன், 25 ஜூலை, 2012

விடுதலையும் நானும் !




 விடுதலைக்கும் எனக்குமான உறவை இப்போதும் எண்ணி பார்க்கிறேன் . என் தந்தை சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் அவர்கள் தருமபுரி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டர்களின் பாடிவீடாய் திகழ்ந்த மொரப்பூர் ஒன்றியத்தில் கடத்தூரில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் .இவரின் சகோதரர்கள் அனைவரும் தீவிரமான காங்கிரஸ் தொண்டர்கள் .என் தந்தையின் இயல்பான முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப இயக்க தோழர்களின் நட்பும் கிடைக்க இயக்கத்தில் இணைந்தார் .பிறகு புரட்சிகர திருமணம் செய்து கொண்டு  என் தாயுடன் ஊற்றங்கரை குடிபெயர்ந்த போது என் வீட்டிற்குள் எனக்கு முன்பே விடுதலை குடிபுகுந்ததால் ஒரு வகையில் விடுதலை என் மூத்த சகோதரன் !
                   இரண்டு செய்தி தாள்கள் என் தந்தை வாங்குவார் ஒன்று விடுதலை மற்றொன்று தினகரன் (கேபிகே நடத்திய தினகரன் ). ஊற்றங்கரையில் சிறிய அளவில் மருந்து வணிகம் நடத்தி வந்த எங்களுக்கு  காலையில் விடுதலை வீட்டில்  போடுவார்கள் தினகரனை கடையில் போடுவார்கள் விடுதலை வீட்டில் இருந்து கடை திறக்க என் தந்தை போகும்போது கடைக்கு எடுத்து செல்வார் .விடுதலையும் கடையிலேயே போடலாமே இதை மட்டும் வீட்டில் இருந்து கடைக்கு ஏன் எடுத்து செல்ல வேண்டும் என்று என்தந்தையிடம் கேட்ட போது அம்மா படிக்க வேண்டாமா ?நீ படிக்க வேண்டாமா ?என்பார் அந்த சின்ன வயதில் நாம் படிக்க கூட பேப்பர் அப்பா வாங்குகிறாரே  என்கிற பெருமிதத்தில் காலையில் பாடபுத்தகங்கள் படித்து முடித்த உடன் என் தந்தை கடைக்கு போவதற்குள் விடுதலையை அவசரமாய் புரட்டுவேன் ஒன்றும் புரியாது ஒரு வகையில் விடுதலை என் பாட புத்தகம் !
                  பெரும்பான்மையான உயர் நிலைக் கல்வி ,மேல்நிலை கல்வி ,கல்லூரி கல்வி விடுதிகளில் கழிந்தது .விடுமுறைகளில் வீடு திரும்பினால் அடுக்கி வைக்கப்பட்ட பழைய விடுதலை தான் இயக்க தொடர்புக்கான உறவு சங்கிலியும் ,பொழுது போகிற்க்கான  வாசிப்பு தாளும் படிக்கிற போது எழுகிற சந்தேகம் இரவில் படுக்கும் போது என் தந்தையுடன் விவாதமாய் மாறும் .ஒரு வகையில் விடுதலை என்னை பட்டை தீட்டிய நண்பன் !
                     கருநாடக மாநிலம் மங்களூரில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது என் தந்தை மறைந்தார் .அது வரை இயக்க செயல்பாட்டில் நானோ ,எனது சகோதரரோ இருந்ததில்லை .என் தந்தையின் இரங்கல் கூட்டத்தில் தலைமை கழக பொறுப்பாளர்கள் அன்றைய விடுதலையில் தமிழர் தலைவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையினை வாசித்தார்கள் .விடுதலை அன்றைக்கு எங்கள் துயரங்களுக்கு தோளாய் இருந்தது .
                        என் தந்தையின் படத் திறப்பு தமிழர் தலைவர் கலந்து கொண்டு வீர வணக்க உரையாற்றினார் .இறுதியாக எனது நன்றி உரை உரை.அதை நன்றி உரை என்பதை விட இந்த இயக்கத்திற்கு  தமிழர் தலைவர் முன்னிலையில்
எங்களின் உறுதி மொழியாக என் தந்தை பணிகளை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என்று உரையாற்றினேன் .இது யாரும் எதிர்பாராதது .தொடர்ந்து என் தந்தையின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையை விடுதலை வெளியிட்டதுடன் நான் ஆற்றிய நன்றி உரையையும் விடுதலை வெளியிட்டது .ஒரு வகையில் விடுதலை எனது தூண்டுகோல்!
                         
மெல்ல இயக்க செயல்பாட்டில் வந்து நகர தலைவர் ,இளைஞ்சரணி ,மாவட்ட துணை செயலாளர் ,என பல பொறுப்புக்கள் அறிவிக்க பட்ட பின்னர் மிக குறைந்த வயதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக அறிவிக்க பட்டேன்  .கழகத்தின் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்க திட்டமிடப் பட்டு மாவட்ட கழக தோழர்களுக்கு நான் எழுதிய ''தங்கம் தர  தங்கமான  நேரம் ''என்னும் கடிதத்தை விடுதலையில் எடுத்து போட்டு மின்சாரம் எழுதிய கட்டுரை இன்றைக்கும் எனக்கு பூரிப்பும் பெருமிதமும் கொள்ள செய்யும் நிகழ்வாகும் .
               ஊற்றங்கரை காவலர் குடி இருப்பில் கரையான்புற்றுக்கு கோவில் கட்ட எடுத்த முயற்சிகளை விடுதலை மூலமாக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தடுத்தது ,நெடுஞ்சாலை துறை பலகையில் ஓம் குறியீடை நீக்க செய்தது என பல முயற்சிகளுக்கு விடுதலை என்னோடு இருந்தது விடுதலை ஒரு வகையில் என் ஆயுதம் !
           இன்றைக்கு விடுதலை அதிகம் சந்தா சேர்த்த மாவட்டத்தில் ''விடுதலை வேர்கள் ''என்கிற பாராட்டுடன் மேடையில் நிற்கிறேன் .நண்பர்களுடன் விடுதலை வாசகர் வட்டம் ஆரம்பித்தோம் இன்றைக்கு தமிழர் தலைவரே ரோல் மாடல் வாசகர் வட்டம் என்று சொல்லும் வண்ணம் செயலாற்றி வருகிறது .அந்த வாசகர் வட்டத்திற்கும் செயலராக நான் இருக்கிறேன் .எனது பிறப்பு முதல் என் தந்தை மறைவு,எனது திருமணம் ,என் பிள்ளைகள் பிறப்பு தொழில் ,இயக்க பொறுப்பு அத்தனையும் விடுதலை பதிவு செய்து உள்ளது . சரி விடுதலைக்கும் எனக்கும் என்ன உறவு ? என் உடலுக்கும் மூச்சுக்கும் என்ன உறவோ அந்த உறவு தான்