புதன், 22 மார்ச், 2017

நாலு மாத பேலியோவும் நானும் .....


உடல் எடைகுறைப்பிற்கான போராட்டம் என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே செய்து வந்திருக்கிறேன் .ஒவ்வொரு முறையும் எனது முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன .ஹெர்பாலைப் தொடங்கி பல்வேறு டயட் முயற்சித்து எதுவும் சரிப்பட்டு வராமல் ‘நாம குண்டா இருந்தா தான் அழகு ‘’என்று சமாதானம் செய்து கொண்டேன்
என்னை பார்த்தால் என் தந்தையை பார்ப்பது போலவே உள்ளது என்பார்கள் பலர் ,அவரது உருவ அமைப்பு ,குரல் ,உட்பட அவரது நகலாகவே நான் இருந்தேன் .ஆனால் அவர் 43 வயதில் மாரடைப்பில் இறந்து போனார் அவரது உடலமைப்பை கொண்டிருந்த எனக்கு 43 வயது தான் என்னுடைய எல்லைகோடு என்று நம்பியிருந்தேன் .இது பத்தாது என்று சர்க்கரை நோயும் எட்டிப்பார்க்க துவங்கி இருந்தது .எந்த டயட் ஆரம்பித்தாலும் முதல் இரண்டு நாட்கள் பிரச்சனை இல்லை மூன்றாவது நாள் ஏற்படும் தசை பிடிப்பு CRUMPS வலி உயிரே போய்விடும் .வலியின் அவதியில் மீண்டும் பழைய உணவு நிலைக்கே மாறிவிடுவேன்
என் மீது அன்பு கொண்ட பலரும் உடல் எடை குறையுங்கள் என்று அறிவுரை கூறும்போதும் ,வெளிநாட்டில் இருந்து வரும் மைத்துனர் உடல் எடை குறைக்க ஏதாகிலும் ஒரு சாதனங்கள் வாங்கி வரும் போதும் மீண்டும் ஒரு உத்வேகம் வரும் ஏதாகிலும் ஒன்றை முயற்சித்து முடியாமல் விட்டு விடுவேன்
அப்போது தான் முகநூலில் பேலியோ குறித்த பல்வேறு கட்டுரைகள் தென்பட மிக ஊன்றி படித்தேன் மருத்துவர் Mariano Anto Bruno Mascarenhas அவர்களோடு ஏற்பட்ட சந்திப்பில் ‘’நீங்கள் பேலியோ உணவு முறைக்கு தகுதியான நபர் முதலில் இரத்த பரிசோதனை செய்து எனக்கு அனுப்புங்கள்” என்றார் மிகுந்த பயத்துடன் பேலியோ ஆரம்பித்தேன்
தொடக்கத்தில் சடசடவென எடை குறைந்தது முதல் 3௦ நாட்களில் 7 கிலோ எடை குறைந்தது .எனது எடை எப்போதும் மூன்று இலக்க எண்களில் தான் இருக்கும் இரண்டு இலக்க எண் வந்து விட்டாலே பெரிய வெற்றி என்று நினைத்தேன் முதல் பத்து நாள் தலைவலி வரும் ,அது வரும் ,இது வரும் என்றார்கள் எதுவும் இல்லை மிக விருப்பமான உணவை டயட் என்று சொன்னால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கமுடியும் ?
வெற்றிகரமாக 12௦ நாட்களை முடிக்க போகிறேன் ,ஏறக்குறைய 2௦ கிலோ எடை இழப்பு ஏற்பட்டிருக்கிறது .சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபட்டு சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் crumps இல்லை ,குறட்டை இல்லை,இரவு 1௦ மணி என்றால் கண்ணை சுழற்றி கொண்டு வருகிறது தூக்கம் .
பேலியோ தொடங்குவதற்கு முன் HbA1C அளவு 6.9 இப்போது HbA1C அளவு 5.4எடை குறைய குறைய எனது இலக்கை மாற்றி கொண்டே வருகிறேன் ,சாத்தியமே இல்லாத ஒன்று என நம்பியிருந்த ஒரு விஷயம் சாத்தியப்படும் போது சாதனை படைக்க வேண்டியது தானே
பேலியோவிற்கு முன் ,பின் எனது அனுபவங்களை எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும் அனால் இந்த பதிவு அதற்காக எழுதப்படவில்லை நன்றி சொல்ல எழுதப்பட்டது

எனது முதல் நன்றி தமிழ் சமூகத்திற்கு பேலியோவை அறிமுகப்படுத்திய நியாண்டர் செல்வன் அவர்களுக்கு ,அதே போல் எனக்கு அறிமுகப்படுத்திய மருத்துவர் ப்ருனோ அவர்களுக்கும் ,கொஞ்சமும் சலிக்காமல் உணவை முறைப்படுத்தி வரும் துணைவியார் வித்யா அவர்களுக்கும் ,ஆலோசனை வழங்கும் அன்பு சகோதரர் மருத்துவர் ஜெகன் அவர்களுக்கும் ,தனது அன்பான அறிவுரையால் தொடர்ந்து என்னை பயணிக்க வைத்த எனது தாயார் கலைமணி அவர்களுக்கும் மற்ற பேலியோ நண்பர்களுக்கும் நன்றி !நன்றி !!
எடை குறைப்பில் இப்போது பாதி தூரம் தான் கடந்து இருக்கிறேன் இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது என்றாலும் அந்த ஆனந்த அனுபவத்தை எழுத முடியாது .முயற்சித்து தான் பார்க்க வேண்டும் ,விருப்பம் இருப்பவர்கள் முயற்சித்து தான் பாருங்களேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக