புதன், 23 ஜூன், 2010

தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்

நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை இன்னமும் பெருகவில்லை. மருத்துவக் கல்லூரிகள் இப்போதுதான் அரசின் சார்பில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும், கிராமங்களிலும் வரத்துவங்கியுள்ளன!







முன்காலத்துப் பாட்டி வைத்தியமும், வீட்டு வைத்தியமும் நன்கு பயன் தந்தன பெரும் அளவுக்கு. நோய் பற்றிய அடிப்படை அறிவும், அதிலிருந்து மீள உடனடியாக செய்யவேண்டிய வழிமுறைகளும் , எளிய மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.



பிரபல சிறுநீரகவியல் துறை வல்லுனரும், மனித நேயரும், சமூகநீதிப் போராளியுமான டாக்டர் ஏ.ராஜசேகரன் M.Ch., F.R.C.S,(Edin), FICS-D.sc. அவர்களும், அவரது நெருங்கிய உறவினரும் மருத்துவ நூல்கள் எழுதும் ஆற்றலாளருமான டாக்டர் கோ. இராமநாதன் வி.ஞி., தி.சி.சி.றி. அவர்களும் எழுதி வெளியிட்ட மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம் எனும் நூலின் இரண்டாம் பதிப்பு - புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பினை நூலாசிரியர் டாக்டர் ஏ. இராஜசேகரன் அவர்கள் தந்தார்.



படித்தேன், சுவைத்தேன். யான் பெற்ற இன்பம் மற்றவரும் பெறவேண்டாமா?



இதில் எடுத்த எடுப்பில் இந்நூலில் முதல் நன்றி யாருக்குத் தெரியுமா? அதுவே ஒரு புதுமை!



ஸ்பெயின் மொழியில் டேவிட் வெர்னர் எழுதிய மருத்துவர் இல்லாத கிராமத்தில் என்ற நூலிலிருந்து அவரது விருப்பப்படி சில பகுதிகளையும், படங்களையும் இதற்குப் பயன்படுத்தி உள்ளோம். அவருக்கு நன்றி என்று கூறியதோடு, இந்தியர்களின் தற்கால உடல்நல பிரச்சினைகளுக்கு ஏற்ப நவீன மருத்துவ அம்சங்களில் தெரிய வேண்டிய மருத்துவ முறைகளை வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளது அருமை!



சீரிய கல்வியாளர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரை தந்துள்ளார்!



எண்பது சதவிகித மக்கள் கிராமப் புறங்களில் வாழும் நிலையில், அவசர சிகிச்சைக்குக் கூட வழியில்லாமலும் நோய் ஏன் வருகிறது? எப்படித் தடுப்பது? என்பது கூடத் தெரியாமலே வாழும் நிலையே உள்ளது!



அறியாமையை விட பெரிய நோய் உலகத்தில் ஏது? அதனைப் போக்கி விழிப்புணர்வை - மருத்துவத் துறையில் ஏற்படுத்தவே கடலில் செல்லும் கப்பல்களுக்கு, கலங்கரை விளக்கத்தின் ஒளி போல_இத்துணை அருமையான தகவல்களை, எளிமையான முறையில் தந்துள்ளார்கள்!



பள்ளிகளில் அடிப்படை மருத்துவம் போதிக்கப் படுவதில்லை. பழைய கள் புது மொந்தை என்பது போல, பழைமைக்குப் புதுமை மெருகேற்றி புளித்தவைகளையே பரப்பும் பாடப் புத்தகக் கொடுமை இன்னமும் உள்ளது. வாழ்வியல் பாடங்கள் அங்கே சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பது பெரும் குறையாகும்!



192 தலைப்புகளில் விளக்கங்கள் எளிய தமிழில். சுமாராக எழுதப்படிக்கத் தெரிந்த கிராமத்துவாசிகள்_- பெற்றோர்கள், - தாய்மார்கள் உட்பட பலருக்கும் ஒரு வழிகாட்டும் மருத்துவ நூலாக இது பயன்படுவது உறுதி!



டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி, 5,80,000 கிராமங்களில் 70 சதவிகித மக்கள் வாழுகின்றனரே அவர்களுக்கு இந்நூல் அறிமுகமானால் பெரிதும் தன்னம்பிக்கையும், தளராத வாழ்வு நீட்டிப்பும் தானே வர வாய்ப்பு உண்டு.



சிறுசிறு பட விளக்கத்துடன் அவசரத்தில் கூட படிக்கலாம். பயன்பெறலாம்.



1. நோயுற்றவரை அணுகுவது எப்படி?



2. நோயுற்றவரை பராமரிப்பது எப்படி?



3. மருந்தில்லாமல் குணமாக்க முடியுமா?



4. மருந்துகள் தேவையா? தேவையில்லையா?



போன்ற அரிய தகவல்கள் அடங்கிய அறிவுரைக் கொத்தாக இந்நூல் உள்ளது! மருத்துவ ஆசானாக எளிய மக்களுக்கு வழிகாட்டும் துணைவன் இந்நூல்.



352 பக்கங்கள் கொண்ட இந்நூல் விலையோ மலிவுதான். 150 ரூபாய்கள்தான்!



தமிழ் வளர்ச்சித் துறை பரிசினை பெற்ற நூல் இது! இனமானப் பேராசிரியர் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.



தவறான மருத்துவக் கருத்துகள் பரப்பப்படுவதையும் கூட வெகு நேர்த்தியாக இந்நூலாசிரியர்கள் சாடுகிறார்கள்_- அம்பலப்படுத்துகிறார்கள்!



நாடித்துடிப்பை அறிய..... என்ற தலைப்பில் (பக்கம் 206) ஒரு பகுதி:



நமது சினிமாக்களில் இளம் பெண் மயங்கி விழுவாள். உடனே அவசரமாக ஒரு டாக்டரை அழைத்து வருவார்கள். அவர் நாடியைப் பிடித்துப் பார்த்ததும் , உங்க பெண் தாயாகப் போகிறாள் என்பார். அதைக் கேட்டதும் அவர் மணமாகாத பெண்ணாக இருந்தால் அனைவருக்கும் அதிர்ச்சி. மணமான பெண்ணாக இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால், இது முற்றிலும் காதுல பூ சுத்தற காட்சி. கர்ப்பத்தை அப்படிக் கண்டு பிடிக்கவே முடியாது)!



இப்படி சுவையான தகவல் களஞ்சியம் இந்த நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக