செவ்வாய், 26 அக்டோபர், 2010

திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்


தந்தையை விஞ்சிய தனயனாக கே.கே.சி. எழிலரசனின் சாதனை!
மக்கள் தொடர்பும்-செல்வாக்கும்-கூட்டு முயற்சியும்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்
இந்த திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்
தலைமுறை இடைவெளியில்லாத தந்தை பெரியாரின்
தொண்டறம் தொடர்கிறது - அனைவருக்கும் பாராட்டுகள் - தமிழர் தலைவர் அறிக்கை -

வேலூர் திருப்பத்தூரில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு ஆகியவற்றின் வெற்றி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிக மகிழ்ந்து பாராட்டி எழுதியுள்ள அறிக்கை வருமாறு:
வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூரில் 23.10.2010 அன்று காலை நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டமும், மாலையில் நடைபெற்ற மண்டல மாநாடும் கழக வரலாற்றில் ஒரு தனி சரித்திரம் படைத்தன என்றால், அது மிகையாகாது!
மக்கள் திருவிழா மாலையில்; கழகக் குடும்பங் களின் சங்கமம் காலையில் என்ற நிலையில் அமைந்த அந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்!
வாணியம்பாடி தொடங்கி - திருப்பத்தூர்வரை
வாணியம்பாடி தொடங்கி திருப்பத்தூர் சுற்று வட்டாரங்கள்வரை கழகக் கொடிகள் அனைவரையும் வரவேற்றன!
எங்கெங்கு காணினும் கருஞ்சட்டை வீரர் - வீராங்கனைகள் பல்லாயிரக்கணக்கில்!
கிராமப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்லா யிரவர் பந்தல் போடப்பட்ட மாநாட்டில் மாபெரும் மக்கள் கடலாகக் குவிந்து விட்டனர்! நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்குமுன்பே இருக்கைகள் போதவில்லை - அமர்ந்தவர்கள் பல பகுதி மக்கள் - மகளிர் கூட்டமும் கணிசமானவை என்ற அளவில் ஒரு பொதுத் திருவிழாபோல் கூடி விட்டனர்!
எழிலரசனின் மக்கள் தொடர்பு
மாவட்டத் தலைவர் கே.கே.சி. எழிலரசனின் மக்கள் தொடர்புக்கும், மகத்தான செல்வாக்குக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது இம்மாநாடு!
கழக இளைஞரணியில் சுயமரியாதைச் சுடரொளி சோலையார்பேட்டை கே.கே. சின்னராசு அவர்களால் கழகக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, சேர்க்கப் பட்டு படிப்படியாக கழகத்திலும் உயர்ந்து, நகரத்திலும் வளர்ந்துள்ளார்!
இளைஞர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத் தால், அது மிகப்பெரும்பாலான வாய்ப்புகளில் வீண் போவதில்லை. வெற்றியாக அமையும்.
இயக்கத்தில் இளைஞர்கள் பஞ்சமா?
பல பேர் நினைப்பதுண்டு - தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தில் இளைஞர்கள் அதிகம் இல்லை என்று. அது ஒரு தவறான கருத்து என்பதை கழகத் தின் செயற்பாடுகளை, நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் பார்க்கும் பொதுவான எவர்க்கும் விளங்க வைக்கும்.
இளைஞர்கள்மீது தந்தை பெரியார் அவர்களுக் குள்ள பாசம், அன்பு, நம்பிக்கையும் அதிகம் என்பதற்கு இதோ இரண்டு ஆதாரங்கள்:
இதோ பெரியார் பேசுகிறார்!
1929 ஜனவரியில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவில் (13.1.1929 குடிஅரசு இதழில் உள்ளது),
எனது இயக்கத்தையும், தொண்டையும் எனது உடல்நலிவிலும் சரீரத் தளர்ச்சியும், எதிரிகள் தொல் லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல், என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக்கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும். உண்மை யிலேயே, இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருக்குமானால், என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக்கட்டிக் கொண்டு வேறு ஏதாவது துறையில் மூழ்கி இருப்பேன்.
ஆதலால், இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும், சுதந் திரமும், விடுதலையும், சுயமரியாதையையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திர காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது!
(பழைமை) கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர் களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர்களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கிறேன்.
(13.1.1929, குடிஅரசு)
சின்னப் பையன்கள்தாம்...
இரண்டாவது, அதே மாவட்டம் திருப்பத்தூரில் 1933 ஜனவரியில் நடந்த வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய சொற்பொழி (13.1.1933, குடிஅரசு)வில் குறிப்பிடுகிறார்:
தோழர்களே, இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.பி.எல்., அவர்கள் தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார்.
இந்த இயக்கம் இன்று ஏதாவது ஓரளவுக்காவது மதிக்கத் தகுந்த அளவுக்குப் பயன்பட்டு வருகிறது என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதனா லேயேதான் எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதால்தான், சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப் போதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்கவேண்டு மென்பதோடு, பெரிய ஆளுகள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்!
என்னே, அற்புதமான இளைஞர்களுக்கு இயக்கத்தில் அங்கீகாரம், சிவப்புக் கம்பள வரவேற்பு மாட்சிதான் என்னே, பார்த்தீர்களா?
அத்தகைய ஓர் ஆற்றல் வாய்ந்த இளமைத் தலை மையும், அவரைச் சுற்றியுள்ள இளைய நண்பர்கள், நல விரும்பிகளின் ஒத்துழைப்பிலும் இப்படிப்பட்ட சாதனையை லகுவில் அனாயசமாக அந்தக் குழுவினர் (கூநயஅ) செய்து முடித்து முதற்பரிசை தட்டிச் சென்றது.
தலைமுறை இடைவெளி இல்லை
(1) விடுதலைக்கு 800 சந்தாக்களை அந்த மேடையில் அளித்தது.
(2) எடைக்கு எடை (இரு மடங்கு) பணம் தந்தது, அதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துக்குப் பயன்படுத்தச் சொன்னது,
(3) உள்ளூரில் இடம் வாங்கி பெரியார் நூலகம், படிப்பகம் அமைப்பதற்கு அச்சார நன்கொடைகள்.
(4) குடிஅரசு வெளியீட்டு விழா -
இவை எல்லாவற்றையும்விட வாழும் இயக்க வீரர் - வீராங்கனைகளை மாவட்டம் முழுவதும் தேடிப் பிடித்து, விருது வழங்கிப் பாராட்டியது!
வேர்களைத் தேடிப் பெருமைப்படுத்திய விழுதுகளின் கடமை உணர்வின் மாட்சிதான் என்னே!
அவர்களும் அங்கே 60-க்கு மேற்பட்ட, மறைந்தும் மறையாத கொள்கை லட்சிய வீரர்கள் - வீராங்கனை களான சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் என்று படங்களை அமைத்ததானது - தலைமுறை இடைவெளியில்லாத பெரியார் தம் தொண்டறம் இன்றும் தொடருகிறது; என்றும் தொடரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்.
தந்தையை விஞ்சிய தனயன்!
தோழர் எழிலரசன், தன் தந்தையை விஞ்சிய சாதனை யாளராக உயருவதற்கு அவரது நல்ல நண்பர்கள் குழாமே, காரணம்! கட்சி, ஜாதி, மத பேதமின்றி அவர்கள் பெரியார் பற்றாளர்கள் - அவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் இந்த இளைஞர்!
ஒத்துழைத்த பெருமக்களுக்குப்
பாராட்டு - நன்றி!
அவருக்குத் துணையாக மாவட்டச் செயலாளர் மானமிகு கா. மகேந்திரன் - நல்ல இளைஞரணி தோழர்கள் இப்படி பலப் பலர்!
திருவாளர்கள் என்.கே.ஆர். சூர்யகுமார் எம்.எல்.ஏ., எஸ். இராஜேந்திரன் (தி.மு.க. நகர செயலாளர்), பி. கணேஷ்மல் (தலைவர், காமராஜர் அறக்கட்டளை), ஏ.அண்ணாதுரை (திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர்), கு. இராஜமாணிக்கம் (கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர்), பொன்குணசேகரன் (மத்தூர் முன் னாள் ஒன்றிய குழுத்தலைவர்), ஏலகிரி எ.வி. செல்வம் (மாவட்டக் கவுன்சிலர்), ஆர். குலோத் துங்கன் (மாவட்டக் கவுன்சிலர்), இரா. லட்சுமிகாந்தன் (மாவட்ட கவுன்சிலர்), தணிகை ஜி. கருணாநிதி (தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர்), டி.வி. மாதவன் (ரோட்டரி முன்னாள் தலைவர்), டி. மதியழகன், தோழர் பரந்தாமன், அண்ணா அருணகிரி (தொழிலதிபர்), மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங் கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, திருமதி அகிலா தலைமையில் அமைந்த ஆற்றலும், ஆர்வம் வாய்ந்த மகளிரணியினர், ம. கவிதா (மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன், பழ. வெங்கடாசலம், மா. பன்னீர்செல்வம், எம். வெற்றி கொண்டான், ந. கமல், வ. ஆறுமுகம், சித. வீரமணி, அரங்க.இரவி, மா.சி. பாலன், கே.சி.எ. சிற்றரசு, ஜி. அருண், காளிதாஸ், எ.டி.ஜி. சித்தார்த்தன், புலவர் அண்ணாமலை இப்படி பல அணித் தோழர்கள், தோழியர்கள் ஒட்டுமொத்த கூட்டுழைப்பு மாபெரும் வெற்றியை அறுவடை செய்து, முதலிடத்தைப் பெற காரணமாக அமைந்தது.
அனைவருக்கும் நமது இதயமார்ந்த மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்!
இது பணியின் முடிவல்ல; தொடக்கமே!
திருப்பத்தூர் மாடல்
தொய்வின்றி இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து திருப்பத்தூர் மாடல் என்று எல்லோரும் பின்பற்ற முன்வரும் அளவுக்கு மேலும் உழைக்கத் திட்ட மிடுங்கள்!
சதா இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்! மறவாதீர்!!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக