செவ்வாய், 12 அக்டோபர், 2010

கட்டுரை -வாழ்வியல் சிந்தனைகள் -கி .வீரமணி

வழக்கமாக, தஞ்சை வல்லத்தில் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக கல்வி வளாகத்தில் காலை நடைபயிற்சிக்கு நான் செல்லும்போது, துணைவேந்தரும் என்னுடன் வருவார். வேறு சில பேராசிரியர்களும் வருவர்; நல்ல தூய காற்றை சுவாசிப்பதோடு, நிருவாகப் பணிகளைப் பற்றியும், கட்டட வேலைகள், அடுத்த திட்டங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே நடப்போம்.
விடுதிகளைத் தாண்டி நடக்கும்போது, வகுப்புகள் காலை 7 மணிக்கே துவக்கம் என்பதால், மாணவச் செல்வங்கள் காலையில் அவசர அவசரமாக சாரை சாரையாகச் செல்வர். அவர்களில் சிலரைப் பார்த்து, விடுதியில் காலைச் சிற்றுண்டி என்ன சாப்பிட்டீர்கள்? என்றும் விசாரிப்பதுண்டு.
பல மாணவிகள் காலைச் சிற்றுண்டிகளைத் தவிர்த்து விட்டு அவசர அவசரமாக, அறக்க பறக்க வகுப்புக்கு ஓடுகிறார்கள். காலந்தவறாது, தாமதியாமல் வகுப்புக்குச் செல்வது நல்லதுதான்; ஆனால், அதற்காக வயிற்றைக் காயப் போட்டுச் செல்ல வேண்டுமா? அது உடல் நலத்திற்கு எவ்வளவு பெருங்கேடு என்பதை பிள்ளைகளிடம் சில மணித்துளிகள் விளக்கிச் சொல்லத் தவறுவதில்லை நாங்கள்!
இரவு உணவுக்கும், காலைச் சிற்றுண்டிக்கும் இடையே உள்ள இடைவெளி நேரம் மிக அதிகம் 7, 8 மணி முதல் சில நேரங்களில் 10 மணி நேரம் கூட ஆகி விடுகிறது.
அதுவரை வயிறு காலியாகவே இருந்தால் வாயுத் தொல்லை, வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகம் ஏற்பட்டு குடலை அரித்துத் தின்னும் பேரபாயம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்!
மாணவர்கள் பட்டினியாக காலை வகுப்புகளுக்குச் சென்றால், பசி மயக்கம் தூக்கம், அயர்வு, சோர்வு எல்லாம் இணைந்து படிப்பில் கவனம் செலுத்த இயலாத நிலைக்கு ஆளாக்கும்; அத்துடன் இளம் குருத்துகள் வளர வேண்டியவைகள் - கருகிடும் அபாய நிலையும் ஏற்படக்கூடும்.
தஞ்சையில் நடைபெற்ற குழந்தைகள் பழகுமுகாமில் கூட இதை ஒவ்வொரு குழந்தையிடமும் - மாணவ - மாணவிகளிடம் விளக்கியதுபோல, விளக்கிக் கூறினேன்.
Breakfast - பட்டினியை முறியடித்தல் என்றால் நீண்ட அவகாசம் நம் வயிறு காய்ந்து கிடக்கும் நிலையை மாற்றுவது என்பதுதானே! வெள்ளைக்காரன் இதற்கு நல்ல சொல்லையே பயன்படுத்தியுள்ளான்!
பல வீடுகளில், ஒவ்வொரு நாளும் காலையில் பெற்றோர்கள் குழந்தைகளை மாணவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, உடை உடுத்தி, பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ ஆயத்தப்படுத்தி அனுப்புகையில், எளிதில் காலை உணவை எடுத்துக் கொள்ளாது அடம்பிடிப்பதும், சாப்பிடாமலேயே அவசர அவசரமாக, பள்ளிக்கூடப் பேருந்து வந்துவிடும் என்று ஓடிடும் பட்டினிப் பட்டாளம் ஏராளமாகி வருவது நல்லதல்ல.
மொட்டுகள் கருகி விடும் அபாயம் உண்டு இதனால்.
இதுகுறித்து இன்று (12.10.2010) ஆங்கில நாளேடான இந்து ஏட்டில் பல மருத்துவர்கள் உள்பட பல பேராசிரியர்கள் வரை காலை உணவுதான் மிக மிக முக்கியம் என்பதை பல்வேறு கோணங்களில் கூறி வலியுறுத்துகின்றனர்.
காலையில் கார்ன்பிளேக்ஸ், நூடூல்ஸ், சிப்ஸ் இவைகளுக்குப் பதிலாக, இட்லி, தோசை போன்றவைகளை சாப்பிட வைப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
இதில்தான் உடனடியாக சக்தி அதிகம்; செரிமானப் பிரச்சினை இருக்காது. மதிய உணவைவிட, முக்கியம் காலைச் சிற்றுண்டி.
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களாகிய நமக்கும் கூடத்தான்; காலை உணவு கூடுதலாக எடுப்பதும் பழங்களையும்கூட இணைத்துச் சாப்பிடுவதும் மிகவும் ஆரோக்கியமானது வளர்ச்சிக்கு. உடல், அறிவு ஆகிய இரண்டு வளர்ச்சிக்கும் அது உதவக் கூடியது.
இரவு உணவு எவ்வளவு குறைவாகவும், எளிமையாகவும் இருக்கலாம். பகல் உணவு நமக்குப் பழகியதுதான்.
எனவே காலை உணவை நல்ல முறையில் உண்ணச் செய்து குழந்தைகளைப் பழக்கப்படுத்துவது அவசியம்! அவசியம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக