திங்கள், 20 மே, 2019

பிடல் காஸ்ட்ரோ

                                      பிடல் காஸ்ட்ரோ

                                தொகுப்பு:மருத்துவர்.பழ.ஜெகன்பாபு

 பிடல் காஸ்ட்ரோ –கியூபாவின் நாயகர் .இருபதாம் நூற்றாண்டு கண்டிட்ட  இணையற்ற உலக புரட்சியாளர்.
ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு  தம் வாழ்நாள் முழுவதும்  சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் .  

            அமெரிக்காவின் ஒரு மிகச் சிறிய மாநிலத்தின் அளவு கூட இல்லாத நாடு கியூபா . அந்த நாட்டிலிருந்து சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவுக்கு ஒரு சவால் விட்டவர் தான்  பிடல் காஸ்ட்ரோ .

நிலப் பண்ணையாரின் மகனாக பிறந்தவர்.ஆனால்  சிறு விவசாயிகளுக்கும் விவசாய கூலிகளுக்குமாய் போராடியவர் . கம்யூனிச எதிர்ப்புணர்வு கொண்ட ஆர்தோடக்ஸ் கட்சியில் இணைந்து பின் கம்யூனிஸ்டாக மாறி கியூபாவை சோசலிச ,கம்யூனிஸ்ட் நாடாக அறிவித்தவர். இப்படி பல சுவரஸ்யமான தகவல்களை கொண்டது பிடலின் வாழ்க்கை .

1926 இல் பிறந்தவர் .  26 வயதில் 1952-இல்  முதல் புரட்சி தாக்குதலை  நடத்தினார்.மரணிக்கும் வரை அதே போன்று மன உறுதியும் ,  போராட்ட குணமும் கொண்டவராக திகழ்ந்தார்  

2002 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் புஷ் , பிரிட்டன் ,ஆஸ்திரேலியா நாடுகளின் துணையோடு ஈராக் மீது தாக்குதல் நடத்தினார் .

 அப்போது புஷ் ஈரான் , சிரியா , வடகொரியா , கியூபா ஆகிய நாடுகளையும் குறிப்பிட்டு ரவுடி நாடுகள் எனக்  குறிப்பிட்டு அவற்றையும் தாக்குவோம் என்றார்  உலக நாடுகள் பலவும் கண்டித்தன.

சில நாட்கள் கழித்து பள்ளிகளில் மாணவர்களிடையே பிடல் பேசும்போது “இப்போதும் புஷ் ஆண்டவன் இட்ட கட்டளை என்கிறார் . ஆண்டவனிடம் நெருக்கமாக உள்ள போப் ஆண்டவரோ  இது சாத்தானின் வேலை என்கிறார். புஷ்க்கு  ஒரு கடவுள். போப்புக்கு  இன்னொரு கடவுளா ? இதை அவர்களே தீர்மானிக்கட்டும்.  பைபிளை தொட்டு சத்தியம் செய்து பதவியேற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான் ஜப்பானில் குண்டு  போட்டார். வியட்நாமில் குண்டு மழை பொழிந்தார். ஈராக்கில் ஜெபமா  பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? என்று  அமெரிக்காவின் முகமுடியை உலகுக்குக் கிழித்து  காட்டினார்.


பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள் சில:

பிறப்பு  : ஆகஸ்ட் 13 , 1926

இயற்பெயர் : பிடல் காஸ்ட்ரோ ரூஸ்

அவரது குடும்பம் செல்வ செழிப்பான குடும்பமாக இருந்தது. அவரது தாத்தா ஒரு சாதாரண வாகன் ஒட்டியாக இருந்தாலும், அவர் தந்தை கடுமையாக உழைத்து ஏராளமான நிலங்களை பெற்றிருந்தார்.

அவர் சிறப்பான  ஆரம்ப கல்வியை கத்தோலிக்கப் பள்ளிகளில்  பயின்றார்

ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே அரசியல் ஊழலுக்கு எதிரான மாணவர் குழுவிலும்  பின்பு மரபு கட்சி (ஆர்த்தடாக்ஸ் பார்ட்டி ) என்று அழைக்கப்பட்ட கியூப மக்கள் கட்சியில் இணைந்தார்

மார்ச் 10, 1952 இல் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி  ஜெனரல் பாடிஸ்டா இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார்.  இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஆயுதம் ஏந்திய புரட்சியை  நடத்த புரட்சிகர அமைப்பை உருவாக்கினார்.

ஜூன் 26,1953 இல் தனது  26வது வயதில் காஸ்ட்ரோ 160 ஆயுதமேந்திய சாண்டியாகோவிலுள்ள  இளம் வீரர்களுடன் மொன்கடா  ராணுவக் காவல்  முகாம் மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது அதில் அவரும்  மேலும் 20க்கும் மேற்பட்ட போராளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

மொன்கடா தாக்குதலின் போதும்  அதை ஒட்டியும் 60 போராளிகளுக்கு மேல் பாடிஸ்டா ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    சில வருடங்களுக்கு முன்பு தான் தனது சட்டப் படிப்பை முடித்திருந்த காஸ்ட்ரோ  பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது மறுப்பறிக்கையை  தானே தயார் செய்து கொண்டார். நீதிமன்றத்தை அவர் கியூபா  புரட்சிக்கு  ஆதரவாக வாதிடும் களமாக மாற்றி விட்டார். அந்த அறிக்கை பின்பு  “வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பல்லாயிரகிக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டது

    அவருக்கும் அவர்  தோழர்களுக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகரித்து வந்த மக்கள் பிரச்சாரத்தின் காரணமாக 22 மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டனர்.

1955 இல்  மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பிடல், ஜூலை மாதம் மெக்சிகோ பயணமானார். அங்கிருந்தபடியே கியூபா  புரட்சிக்கான  புரட்சிகர படையை துவங்கினார். அங்குதான் அவர் “சே” குவேராவை சந்தித்தார். அங்கே ஒரு கொரில்லா படையை உருவாக்கினார்

1956 , டிசம்பர் 26 அன்று சே குவேராவுடன்  தனது சகோதரர்கள் உள்ளிட்ட 81 சக போராளிகளுடன் “கிராண்மா”என்ற  கப்பல் மூலம் கியூபக் கடற்கரையை அடைந்தார். அடுத்த 2  ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஜூலை 26 இயக்கத்தின் மத்திய தலைவராக  தொடர்ந்ததுடன் புரட்சி இராணுவத்தையும் வழி நடத்தினார்.

பின் பல்வேறு இன்னல்களுக்கிடையே புரட்சிப் படையை புனரமைத்து   தனது போராட்டத்தை சியரா மேஸ்ட்ரா மலைகளிலிருந்து கியூபா தீவு முழுவதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தினார்

ஜனவரி 1, 1959 அன்று கியூபாவை விட்டு சர்வதிகாரி பாடிஸ்டா ஓடிவிட்டார். காஸ்ட்ரோவின் அறைகூவலை  ஏற்று புரட்சிக்கு ஆதரவாக  பொது வேலை நிறுத்தத்தை மக்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

ஜனவரி 8 1959 அன்று காஸ்ட்ரோ வெற்றிகரமாக கியூபா ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஹவானாவில் நுழைந்தார். பிப்ரவரி 13,  1959 அன்று பிரதம மந்திரியாக அவர் பொறுப்பேற்றார். டிசம்பர்   1979 வரை அந்த பதவியை  வகித்தார். பின் தேசிய  சபையின் ஜனாதிபதியாகவும் , மந்திரி சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். தானாக தன் பதவியை விட்டு அவர் விலகும் வரை அந்த நாட்டின் அதிபராக நீடித்தார்


 பிடல் - சில ருசிகர தகவல்கள்

  
தாம் பைனஸ்  தீவில் சிறைப்பட்டிருந்த போது தனது மனைவி மிர்தா  கணக்கராகப் பணியாற்றினார் என்பதை அறிந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். தன் குழந்தையை காப்பாற்றத்தான் அரசு வேலையில்  சேர்ந்ததாக மனைவியும் அவர் கூறியதையும் அவர் ஏற்கவில்லை. பின்னர் மனைவி வேறொருவரை மணந்து வெளிநாடு சென்று  விட்ட போதிலும் பிடல்  மறுமணம் செய்யவில்லை

   ஒருமுறை பிடலின் மகனுக்கு உடல் நலிவுற்றது. கண்டிப்பாக அறுவை சிகிச்சை தேவை என்ற நிலை வந்தது. மகனை கண்ட பிடல் 5 பிசோவை (கியூப  நாணயம்) ஒருவரிடம் கடன் வாங்கி கொடுத்து விட்டு, ஒரு நட்பு டாக்டரிடம் சிகிச்சை பெறச்சொல்லி விட்டுப் போய்விட்டார் அப்போது அவர் பையில் நூறு பிசோ  இருந்தது.  இது துப்பாக்கிகள்  வாங்க வந்த நன்கொடை ஆதலால் மகனின் மருந்துக்காக செலவிட முடியாது  மறுத்து விட முடியாது என கூறினாராம்

   தான் ஒரு பண்ணையாரின் மகனாக இருந்தும் விவசாயிகளின் துயர வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்துவார். அவர் கல்லூரிப் படிப்பின்போது விடுமுறையில் வந்திருந்த தருணத்தில், சிறுநில சொந்தக்காரர்களையும் , விவசாயிகளையும்  திரட்டி யுனைடெட் ஃப்ரூட் சர்க்கரை  ஆலை (அமெரிக்க நிறுவனம்) க்கு எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கினார். அப்போது தன் தந்தையாரின் கரும்புப் பண்ணையில் முதலில் தீ வைக்குமாறு  யோசனை கூறினார்.  கரும்பு வயல்கள் பற்றி எரிந்தன.  பிடல் அப்போது அகப்படாமல் தப்பி விட்டார். போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் கியூபப் புரட்சி வெற்றி பெற்று நிலச் சீர்திருத்தச்சட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு எடுத்துக்கொள்ளும் பண்ணை நிலங்களுக்கு  இழப்பீட்டு தொகை தர ஒப்புக் கொள்ளப்பட்டது. அதில் ஒரே ஒரு விதிவிலக்கை  அறிவித்தார் தன் தந்தைக்கு சொந்தமாயிருந்த 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்திற்கு மட்டும் இழப்பீடு தொகை கிடையாது என அறிவித்து அந்த நிலத்தை பிடலும், சேகுவாராவும் நேரில் சென்று விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்கினர்

  
    புரட்சி வெற்றி பெற்ற போது தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தேசபக்தர் உர்சியா  என்பவரை ( இவர்தான் மொன்கடா  இராணுவ முகாம் தாக்குதல் வழக்கில்  நீதிபதியாக இருந்தவர்) அதிபராக அறிவித்தார் ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர், பொருளாதார நிபுணர்கள் இருவர், தனது ஆதரவாளர் இருவர்  ஆகியோரை கொண்ட மந்திரி சபை அறிவித்தார்


  
     பிடலுக்கு சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் அரை கட்டு சுருட்டு பிடித்து வந்த அவர் தம்  மக்களுக்கு முன் மாதிரியாக திகழ அந்த பழக்கத்தை அடியோடு கை விட்டார்

   
    பிடல் ஒரு புரட்சியாளர் மட்டுமில்லை. நல்ல இலக்கிய ரசனை கொண்டவர்.மேலும் அறிவுத்தேடல்  அதிகம் உண்டு. அறிவியல் , மருத்துவம் என எந்தத் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கிடைத்தாலும் உடனே அதை முழுமையாக படித்து விடுவார்.பிடல்  ஒரு மிகச்சிறந்த பேச்சாளர். எங்கே, எப்போது பேசினாலும், தன் திறமையால் அனைவரையும் கவர்ந்து விடுவார். கியூபாவில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்றால் அவரை  ரசிக்க மக்கள் ஆங்காங்கே கூடிவிடுவர். நாடே ஸ்தம்பிக்கும்.

      உலகில் அதிக கொலை முயற்சிகளுக்கு தப்பியவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ இவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் மட்டும் 638. உண்ணும் உணவில், குடிக்கும் பானத்தில், பிடிக்கும் சுருட்டில், என பலவகை கொலை முயற்சிகளையும் முறியடித்து உயிரோடு உலா வந்தவர் இந்த புரட்சியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக