திங்கள், 20 மே, 2019

சேகுவேரா


                                               சேகுவேரா 

                            தொகுப்பு : மருத்துவர் .பழ .ஜெகன்பாபு 


 
உலகத்தின் மிகச்சிறந்த போராளி. புரட்சியாளன்  என்று சொன்னால் அது ஒன்றும் மிகைப்படுத்தல் ஆகாது

ஏனெனில் ஒரு புரட்சியாளர் எப்போது உருவாகிறான்:

Ø தனது இனம் , மொழி அல்லது தனது  நாடு ஒடுக்கப்படும் போது அல்லது அடிமைப்படுத்தப் படும் போதும்

Ø  வறிய ஏழைக் குடும்பத்தில் உழன்று  சமூகத்தின் மேல் கோபம் எழும்போது

Ø படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் அலையும் போது


இந்த  எந்த வரையறையிலும்  சேகுவேரா இணைத்துப்  பார்க்க முடியாது

ஏனெனில் அவள் புரட்சியில் பங்கெடுத்த எந்த நாடும் இவரின் சொந்த நாடு கிடையாது.

 வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல கல்வி பெற்று பின் மருத்துவராக பட்டம் பெற்றவர்.

எனினும் முதலாளித்துவ ஏகாதிபத்திய எங்கெல்லாம் தன் குணத்தைக் காட்டுகிறதோ  அங்கெல்லாம் சென்று போரிட்டார்.

“உலகில் எந்தெந்த நாடுகளெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறதோ அவை எல்லாம் என் நாடு” என்று பரந்த மனத்துடன் கூறிய வீரர் இந்த சேகுவேரா

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபப் புரட்சியில்  வெற்றி கண்ட நாயகனாக நின்று, அதன் பின் ஆப்பிரிக்க கண்டத்து  காங்கோவில் போராடி  விட்டு , இறுதியாக பொலிவியாவில் போராடி அங்கே சுட்டுக் கொல்லப்பட்டார்

இதனை மேம்போக்காக படிக்கும்போது புரட்சி , புரட்சி என்று பேசி தெரியும் இயல்பு வாழ்க்கை பற்றி தெரியாத ஒரு இளைஞன் என்று எண்ணத் தோன்றினால் உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. அவர் கியூபப் புரட்சிக்குப் பின் அந்த நாட்டின் தலைமை வங்கிக்கு (ரிசர்வ் பேங்க் போன்றது) தலைவராக இருந்தார். கியூபாவில்  பணத்தாள்கள் அவர் கையொப்பத்துடன் தான் வெளிவந்தது. பின் கூடுதலாக தொழில் அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அப்போது பல்வேறு நாடுகளுக்குச் சென்று கியூபாவின் தொழில் வளர்ச்சிக்கு வழி தேடினார் . பல்வேறு மாநாடுகளில் உரையாற்றினார். ஆனால் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினால் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தயங்கினர். புரட்சிக்குப் பின் கியூப அரசமைப்பு ஒரு நல்ல நிலை பெற்ற பின் தன் பதவி, குடியுரிமை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு அடுத்து களம் நோக்கி புறப்பட்டார். உலகத் தலைவர்களோடும்  பல பிரதமர்களோடு விமானத்தில் பறந்து உயர்ந்த உணவு உண்டவர். அதை எல்லாம் உதறி தள்ளி  ஒரே நாளில் கடுமையான சூழலில் சரியான உணவு, உறைவிடம் இல்லாத ஆப்பிரிக்க காடுகளில் புரட்சியை முன்னெடுக்க  பயணித்தார்.


சில வாழ்க்கை குறிப்புகள்

“எர்னஸ்ட்டோ குவேரா டி-லா- செர்னா “ என்பது தான் அவர் பெற்றோர் இட்ட பெயர். எர்னஸ்ட்டோ தந்தையின் பெயர். “குவேரா”  குடும்பப் பெயர்

இது “சே” என்பது போராளித் தோழர்களால் சூட்டப்பட்ட புனைப் பெயர் .


 சே பிறந்தது 1928 , ஜூன் 14 குறைமாதக் குழந்தையாக ஒன்பதாவது  மாதத்தில்  பிறந்தார் . அவரின் பெற்றோர் ஸ்பெயின் வம்சாவழி வந்தவர்கள்.
   மூன்றாவது வயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். அது கடைசி வரை அவரை தொல்லைப்படுத்தியது

 மாணவப் பருவத்தில் மொபெட் வண்டியில் பனிரெண்டு மாகாணங்களை  சுற்றி வந்தார்.

அப்போதும் தொழுநோய் மருத்துவமனைக்கு  சென்று பல நாட்கள் தங்கி தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார்

1953இல் மருத்துவப் பட்டம் பெற்றார்

அதன்பின் தொழிற்சங்கங்களில்  இணைந்து போராடினார். தொழிற்சங்கத் தலைவர் ஆவதற்காக  சுரங்க தொழிலாளியாய் பணியாற்றினார்.

ஒவ்வாமை(Allergy ) துறையில் ஆய்வு மாணவராகவும்  பணியாற்றி உள்ளார்.

1954-ல் மெக்சிகோவில் மத்திய மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்தார்  

மெக்சிகோவில் உள்ள போதுதான்  பிடலை சந்திக்கிறார். முதல் தாக்குதல் (ஜூலை 26, 1953) தோல்விக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ பின் விடுதலை செய்யப்பட்டவுடன் மெக்ஸிகோ செல்கிறார் .

1956 ஜூன் 4 , மெக்ஸிகோவில் சேவும் பிடலும் தோழர்களும் மெக்ஸிகோ அரசால் கைது செய்யப்படுகின்றனர். பின் நவம்பர் மாதம் வெளியாகி 81 போராளிகளுடன்  கிராண்மா என்ற படகில் கியூபாவை  வந்தடைகின்றனர்.

பின்பு கியூபாவில் புரட்சி படையை செழுமைப்படுத்தி புரட்சிக்கு தயார் செய்தனர்.

 புரட்சிப் படையின் மருத்துவராக இணைந்த  சேகுவாரா பின்  புரட்சிப் படையின் கமாண்டராக” ஒரு பிரிவின் தளபதியாக செயல்பட்டார்

கியூப புரட்சிக்குப்பின் மத்திய வங்கியின்  தலைவராக தொழில் அமைச்சராக பணிபுரிந்தார்.

 பின் மீண்டும் பிற நாடுகளுக்குச் சென்று புரட்சிப் படைகளை உருவாக்கினார்.காங்கோவிலும்  பின் பொலிவியாவிலும்  கொரில்லாப் படைக்கு  தலைமை ஏற்றார் .

1967 ,அக்டோபர் குவேராவின் கொரில்லா படையினரை பொலிவியா மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் சுற்றி வளைத்து கடும் சேதம் ஏற்படுத்தினர்.

அக்டோபர் 8, 1967 குவேரா  படுகாயத்துடன் அரசுப் படையால்  பிடிக்கப்படுகிறார். மறுநாள் சேகுவேரா சுட்டுக் கொல்லப்படுகிறார்

அவர் இறந்து சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் பொலிவியாவில்  அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து  தோண்டி எடுக்கப்பட்டு,கியூபாவில்  சாண்டாகிளாரா நகரத்தில் சேகுவராவும் அவரது தோழர்களும்  அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டனர்



இத்தனையும் 39 வருடம் 45 நாட்களுக்குள் சேகுவேரா சாதித்தவை. சேவின்  வாழ்க்கையில்  பல பரிணாமங்களை பார்க்கிறோம். இளமை வேகமும் துடிப்பும் கொண்ட இளைஞராக, போர்க்களத்தில் ஆயுதபாணியாக நிற்கும் கொரில்லா வீரனாக ,கியூபாவின்  பொருளாதார நிர்வாகியாக என்று  பல வடிவங்களில்  சேகுவேரா பரிணமித்துள்ளார்.  

கியூபாவை விட்டுக் கடைசியாக  சேகுவரா வெளியேறும் போது தன் நண்பருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அதில் “எனது வீடு என்பது என் இரு கால்கள்  என்று மீண்டும் ஆகியிருக்கிறது என் கனவுகளுக்கு எல்லையோ  முடிவோ இல்லை அல்லது துப்பாக்கி குண்டுகள் வேறொன்றை முடிவு செய்யும்வரை” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான் அவரது கனவுகளுக்கு  எல்லைகளே  இல்லை. சமத்துவமும் மானிட விடுதலையுமே  அவரின்  வேட்கையாக  இருந்தது. இப்படி எல்லைகளைக் கடந்து சிந்தித்த போராளி வேறு யாரும் உலக வரலாற்றில் இல்லை எனலாம்.

அதனாலயே இன்றும் புரட்சி என்ற சொல் ஒலிக்கப்படும் போது “சே” நினைவுக்கு வருகிறார். ஒருவர் மறைந்து காலங்கள் ஓட ஓட அவர்களின் நினைவுகள் சமுதாயத்தில்  மங்கிவிடும் . ஆனால் “சே”  எதிலும் வித்தியாசமானவர். மறைந்து காலங்கள் அதிகமாக உருண்டோடும் போது தான் அவர்  உலகில் அதிகம் அறியப்பட்டுள்ளார்


சில தகவல்கள்

அவர் மாணவப் பருவத்தில் பயணம் மேற்கொண்டபோது தொழுநோயாளிகளுடன்  ஒன்றாகத் தங்கி அவர்களுடனே உணவு உட்கொண்டு கட்டியணைத்து அவர்கள்
 வாழ்க்கையே  மாற்றியதோடு மட்டுமின்றி அங்குள்ள மருத்துவர்களும் அவ்வாறே பழகுமாறு செய்தார் .

கியூப புரட்சியின்போது ராணுவ முகாம் தாக்குதல் சமயங்களில் எதிரி பாடிஸ்டா படை வீரர்கள் காயமுற்று இருந்தாலும் ,மருத்துவராக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மனிதநேயக்காரர் சேகுவேரா .

பிடலை முதல் முறையாக மெக்ஸிகோவில் சந்தித்த போது அன்று இரவெல்லாம் கியூபாவைப் பற்றி உரையாடினார். சே சொல்கிறார்  “இரவு முழுக்க பிடல் பேசினார் பொழுது விடியும்போது நான் அவரோடு புரட்சியில் பங்கெடுப்பது  என முடிவு செய்து விட்டேன்” என்கிறார் ஒரே நாளில் மருத்துவப் பணியை கை விட்டு புரட்சி படையில் இணைகிறார்

சேகுவேராவும் பிடலும் அமைச்சர்கள் ஆன பின்பும் பல நாட்கள் கரும்பு தோட்டத்தில் கரும்புகளை வெட்டினர்.


கியூபா  புரட்சி முடிந்து அமெரிக்க அரசு அமைக்கப்பட்ட பின் அமெரிக்க ஏவிவிட்ட கூலிப்படை பன்றி வளைகுடா பகுதியில்  தாக்குதல் நடத்தியபோது சேகுவரா தானே களத்தில் நின்று (தொழில் அமைச்சர் ஆன பின்பும்) போரிட்டு வெற்றி பெற்றார்


சே புதைக்கப்படவில்லை
புரட்சியாளராக விதைக்கப்பட்டிருக்கிறார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக