புதன், 12 ஜனவரி, 2011

சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்

(சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் அவர்களின் மறைவு குறித்து புலவர்.மா.சக்கரவர்த்தி பாடிய இரங்கற்பா)

பொருளற்றார்  பூப்பார் ஒருகால்
என்றான்  வள்ளுவன்

வண்டியோட்டி  வயிறு வளர்த்த
என் மாமன் அண்ணாமலைக்கும்
உண்ணாமலைக்கும் ..........
நான்காம் மகனாய் பிறந்தான்
என் அன்பு மாப்பிள்ளை
என் அறிவு மாணாக்கன்
பழனியப்பன் என்கிற பகுத்தறிவப்பன்

தந்தையால் கொஞ்சி மகிழ்ந்து
விளையாட முடியாதவன்
தமையன்களால் தாங்கத்
தவழ்ந்து எழுந்தவன்

வாட்டிய வறுமையும்
பூட்டிய உழைப்புமாய்
ஓட்டிய குடும்பத்தில்
ஒருவன் உயர்ந்தான்
அவன் தான் அருணாசலம்
அந் நாளைய ரோடு மேஸ்தரி !

சீர் தேடி சீமை சென்ற
சிவபிரகாச மாமனோ ....
ஊர் தேடி உழைப்பே
செல்வமென திரும்பி வந்தார்
உயர்த்து குடும்பம்
ஒன்றுக்கு நான்காய்
வீடுகள் பெருகின

ஆசிரியர் பயிற்சிக்கு
தேறினான் பழனியப்பன்
ஆனால் .....
பிள்ளைகட்கு சொல்லித் தர\
வாய்க்கவில்லை

ஆறுதல் தந்து மேஸ்திரி
அவனுக்கு சோடா பாட்டில்
சுற்றி நிரப்பி
ஊர் ஊராய் கடை கடையாய்
போட சொன்னார்

மிதி வண்டியில்
கொளுத்தும் வெயிலில்
மேனி வியர்க்க
சுழன்று சுழன்று உழைத்தான் அவன்
அய்யோ...!இன்று
சுழன்றது போதுமென ஒய்ந்தானோ ?
.................................................................
................................................................

கோரிக்கையற்று  கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா  எனக்
கைம்பெண்களுக்காகக்
கலங்கிய பாவேந்தன்
கனவை நனவாக்கினான்
கண்ணான பழனியப்பன்

எங்கள் கடத்தூரில்
வேரில் பழுத்த பலாவாய்
கலைமணி என்பாள்
கலங்கி இருக்கையில்

மணந்திடு அவளை மாப்பிள்ளை
என நான் வேண்ட
குணக்குன்றாம்
கோடியில் ஒருவனாம் பழனியப்பன்
அணங்கினை சந்தித்து
அவள் அண்ணன்மார்  சகதீசன்
சோதரர் ஆகியோடு

பெரிய மாமன் சிவபிரகாசம்
கைம்பெண் கொடுமை ஒழிப்பு
ஆதரவோடு
பெண்குலத்து மாதரசியாம்
தருமபுரி காளியம்மாள்
துணை வர

திருவண்ணாமலையில்
கைபிடித்தான் கலைமணியை!
.........................................................
............................................................

முதலில் பெண் பெற்றால்
என் வீட்டு மருமகளாய்
வரவேண்டும் எனக் கேட்டேன்
ஒப்பினார் இருவரும்
ஆண் இரண்டை பெற்று விட்டு
மாமனுக்கு தந்த வாக்கை
மறந்து துறந்து விட்டு
வானின் பெரிதாம் புகழுடம்பை
வையத்தார் போற்ற
தான் சென்ற அடைந்தானே !
தகுமோ பெரியாரே !

என் ஊன் இன்று உருகி
உள்ளம் இன்று கருகி
ஏன் என்று கேட்டு அழுகின்றேன்

ஏக்கமே மூச்சாக
என் எழுத்தால் துக்கமதை
எடுத்து வைத்தேன் உலகீரே!

வாழ்க்கை என்பது வியாபாரம் -அதில்
பிறப்பு என்பது வரவாகும்
இறப்பு என்பது செலவாகும்
என்றான் கண்ணதாசன்

வாழ்க்கை வியாபாரத்தில்
பழனியப்பன்
வானளாவ வெற்றி கண்டு
பிறப்பெனும் வரவினிலே
பகுத்தறிவு பகலவன் வழி சென்று
இறப்பெனும் செலவினிலே
இணையில்லா புகழ் கொண்டான்

தந்தை பெரியார்
பெயர் உள்ளளவும்
பகுத்தறிவு நெஞ்சங்களில்
பசுமை நினைவாக
அவன் பெயர் நிலைத்திருக்கும்
வாழ்க பழனியப்பன் புகழ் !
----கவிதை ஆக்கம் புலவர் .மா.சக்கரவர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக