வியாழன், 2 செப்டம்பர், 2010

ருத்ரனின் பார்வை: வடகலை ஐயங்கார் வீட்டில்..

வடகலை ஐயங்கார் வீட்டில்..








ஐயங்கார் வீட்டுப் பெண் ஒருத்தியின் கதை இது. ஐஸ்வர்யா, தீபிகா போல அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால் அவள் வாழ்க்கை அழகு. தாதெகிங் கூறுவது போல பள்ளம்தான் உயரத்தை தீர்மானிக்கும். அவளது அழகை அவளது தாத்தாவின் குணமும் செயலுமே தீர்மானிக்கின்றன. இது அவள் கதை என்பது போல அவளது தாத்தாவின் கதையும்தான்.கமலா படிப்பில் ஆர்வமுள்ள பெண். சிறு வயதில் தெருவில் சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கில்லித் தண்டு கண்ணில் பட்டு ஒரு கண்ணில் பார்வை இழந்தாள். என்னென்னவோ வைத்தியங்கள் செய்தும் சரியாகாததால், மாற்றுக் கண் வைத்துப் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள்.கண்ணில் இப்போதெல்லாம் நுண்ணிய கருவிகள் மூலம் உள்பார்த்து, கணினியில் படமாக நிபுணர்கள் பார்வையிடுவது போல அந்தக் காலத்தில் இல்லை. அவளது கண்ணுக்குள் எப்படி இருக்கிறது, மருந்துகள் என்னென்ன மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த ஓவியன் பார்த்து வரைய வேண்டும். அந்தப் படங்களின் அடிப்படையில்தான் மருத்துவக் குறிப்புகள் விவாதிக்கப்படும்.அப்படி கண்ணோடு கண்ணோக்கிய ஓவியனுக்கும் கமலாவிற்கும் காதல் பிறந்தது. அந்தக் காதலுக்கு வழக்கம் போல வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அவளது குடும்பம் அப்படி. இதைப் புரிந்து கொள்ள அவளது தாத்தாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த தாத்தாவின் பெயர் கிருஷ்ணமாச்சாரி.மதராஸ் வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் தலைவர், அன்றைய (1924-1930) சட்டமன்ற உறுப்பினர், எம். கிருஷ்ணமாச்சாரி ஒரு வடகலை ஐயங்கார். அவர் ஜாதி நமக்கு இப்போது முக்கியமில்லாததாய்ப் படலாம், ஆனால் அவருக்கு அது மிகவும் முக்கியமாகப் பட்ட ஒன்று. சாதிப் பற்று மட்டுமின்றி, மதப்பற்றும் அவருக்கு அதிகம். இதை அவர் எழுதிய நூல்களில் ஒன்றான –India’s Higher Call (1934) என்பதில் பார்க்கலாம். அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அம்பேத்கர், காந்தி ஆகியோரை எல்லாம் எதிர்த்தார்.அவரது கொள்கைகளில் சில-1. பெண்களுக்குத் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத்தர முடியாது. அவர்களைச் சின்ன வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், இதுதான் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. (அப்படிச் செய்யாவிட்டால் ஒரு பெண் தன் விருப்பப்படி எவனையாவது திருமணம் செய்து கொண்டு விடுவாள்!).2.எல்லாரும் சமம் என்பது எல்லாம் சுவையான கட்டுக்கதை. காந்தி மட்டுமல்ல, பலரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி நாட்டின் தர்மத்தைக் குலைக்கிறார்கள். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் குறித்து காந்தி காட்டும் அக்கறை நாட்டுக்கு நல்லதல்ல, இதனால் உயர் பண்புகளைக் கடைபிடிக்கும் ஸநாதனவாதிகள் எல்லாரும் ஒன்று திரண்டு கொதித்தெழுவார்கள்.(!)3.எல்லாருக்கும் வாக்குரிமை என்பது சரியல்ல. படிக்காதவர்கள் சரியான முறையில் தேர்தலில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள்; வாக்களிக்க அருகதையற்றவர்கள் .4. தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் மட்டுமல்ல, பாப காரியங்களில் ஈடுபடுபவர்கள். (பக்கம் 110, மேலே குறிப்பிட்ட அவரது புத்தகத்தில்). பக்தி, பிரபத்தி, கைங்கரியம் போன்ற உயர்குணங்கள் புரியாமல் காந்தி சாதுர்யமான வார்த்தைகளால் மக்களைத் திசை திருப்புகிறார்! (பக்கம் 111)5. அம்பேத்கரிடம் அவர் வாதிட்டதை வைத்துப் பார்த்தால், மதத்தின் தலைவர்கள் சொற்படி கேட்டுத்தான் அடிப்படை உரிமைகள் குறித்த விஷயங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்.ஜகத்குரு சங்கராச்சாரியர் முன்னிலையில் கல்கத்தாவில் 1933 நடந்த சனாதன தர்ம மாநாட்டின் தலைவராக இந்த கிருஷ்ணமாச்சார்யா, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான சட்டத்தையும், காந்தியின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தையும் ‘அசுரத்தனமானவை’ என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.ஆனால் இதே கிருஷ்ணமாச்சாரிதான் இந்தியாவின் முதல் (Moral Science) நீதிநெறி போதனைக்கான பாட நூலை 1911 ஆண்டில் எழுதியவர். (The handbook of Morals).



சாதிப்பற்றும் மதப்பற்றும் மிகுந்து, இவற்றுக்காக ஓயாமல் பேசியும் எழுதியும் வந்த அவருக்கு வரதாச்சாரி என்றொரு மகன். இந்த வரதாச்சாரி கோவில் யானைக்கு நாமம் U போடுவதா Y போடுவதா என்ற வழக்கில் ஆஜரானவர். இந்த வரதாச்சாரியின் மகள் கமலா.அவள் சாதியை விடவும் காதலுக்கு முக்கியத்துவம் தந்தாள்.வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஜாதியை, சம்பிரதாயத்தைப் புறக்கணித்துத் தன் காதலன் வீட்டுக்கு வந்தாள். அந்தக் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவளுக்கு கோவிலுக்குப் போவதில் நம்பிக்கை கிடையாது. இன-மத வேறுபாட்டுடன் யாரையும் பார்க்கவும் தெரியாது. தன் 80வது வயதில் 23 வயது பெண் ஒருத்தி, “பாட்டி, எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார்” என்று சொன்ன போது, ‘சொல்லிப்பாரு, கேட்டுப்பாரு, ஒத்துவரலென்னா வீட்டை விட்டு வெளியிலே வந்துடு. இந்தப் பையனை லவ் பண்றே இல்லே, அவனை நம்பினா டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ” என்று அறிவுரை(!) வழங்கியவள்.அவளுக்கு சாதி கிடையாது, இனம் கிடையாது, மத நம்பிக்கையும் கிடையாது, போலிச் சடங்குகளிலும் ஈடுபாடு கிடையாது. தன் காதல் கணவன் இறந்த போது கூட வெட்டியாய் காரியமெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்.அவள் தாத்தா சொன்னது போல் நடந்திருந்தால் மிகச் சிறிய வயதில் பால்ய விவாகம் நடந்திருக்கும். வசதியாகக் கூட வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவளைப் பற்றிப் பேச ஒன்றும் இருந்திருக்காது. அவளது தாத்தா சொன்னபடி நாடு கேட்டிருந்தால், இன்னும் ஜாதி பேதம் தீவிரமாக இருந்திருக்கும்.60 ஆண்டுகளுக்கு முன்னர் இவளைப் போன்றோரும் இருந்தார்கள், இவளது தாத்தாவைப் போன்றவர்களும் இருந்தார்கள். இன்னமும் இப்படி இரண்டு வகை மக்களும் இருப்பதுதான் கேவலம். இன்னமும் ஜாதி வெறியுடன் மக்கள் இருப்பதுதான் அநாகரீகம். இதை இணையத்திலும் காட்டிக்கொள்வது தான் அதிகேவலம்.கண்பார்வை சரியில்லாததால் அவள் படிக்கவில்லை. படித்தும் கோணலாகவே பார்ப்பவர்களைவிடவும் அவளது பார்வை கூர்மையானது, தெளிவானது. அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக