புதன், 21 மார்ச், 2012

சிதிலமாய் சித்தன்ன வாசல்

அண்மையில் எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவரின் மணவிழாவிற்காக அறந்தாங்கி சென்றேன் .பயண ஏற்பாடுகள் ,எங்கே தங்க வேண்டும் ? போகிற வழியில் என்ன என்ன பார்க்கலாம் என்பதையெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு விட்டார் எனது அன்பு சகோதரர் மருத்துவர் பழ .ஜெகன் பாபு .அவரது புதிய மகிழ் உந்தில் சுகமான இலவச பயணம் என்பதால் நானும் எனது துணைவியும் அவரோடு பயணமானோம் .ஆனால் நான் எதிர் பார்க்கவே இல்லை இந்த பயணம் பல செய்திகளை கற்று தந்தது .இந்த பயணத்திற்கு இடையில் புதுக்கோட்டையில்  திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு அளிக்க கோரி நடை பெற்ற ஆர்பாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம் .அப்புறம் தொட்டியம் பகுதியில் விற்கப்பட்டு வரும் வாத்துக் கறி...இது குறித்து எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன் .இப்போது சித்தன்ன வாசல் பற்றி ...............

                சித்தன்ன வாசல் செல்லும் வரைக்கும் அதை பற்றி பெரிய எண்ணம் எதுவும் எனக்கு இல்லை .ஆனால் அதை பார்த்த பின்பு தெரிகிறது  இந்து மதம் ஆடிய கோர தாண்டவத்தின் உச்சத்தின் எச்சமாய் காலம் கடந்து சிதிலம் அடைந்து இருக்கிறது ஒரு உன்னத கலை படைப்பு !


முதலில் வரலாற்றை பார்போம் !சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட நாட்டில் தோன்றிய சமண நெறி தமிழகத்தில் காலுன்றிய போது
சைவ வைணவ அரசன்மார்களால் கழுவேற்றப்பட்டனர். இந் நிலையில் சமண நெறி காக்கவும்,தங்களின் உயிரை பாது காத்துக் கொள்ளவும் சமணர்கள் காடுகளிலும் ,மலைகளிலும் பல ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்தனர் ,அவ்வாறு வாழும் போது தாங்கள் வழிபட சமண கோவில்களை மறைவாக உருவாக்கினர் .அப்படி ஒன்றாய் அமைக்கப்பட்டது தான் சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் !

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழித்தடத்தில் 15 கிமீ தூரம் சென்றதும் உயரமான ஒரு குன்று  இதுதான் சித்தன்னவாசல்.ஒரு காலத்தில்  சமண மத மையமாகத் திகழ்ந்த  சித்தன்னவாசல் இன்று லவ்வர்ஸ் ஸ்பாட் ஆகிவிட்டது,இதில் ஒரு பூங்கா வேறு.அந்த மலை குன்றை ,ஓவியத்தை பார்த்து வெறுத்து போன எனக்கு ஒரே ஆறுதல் தொல்பொருள் இலாகா துறை சார்ந்த ஊழியர் குப்புசாமி என்று அவர் பெயர் .வரலாறு படித்தவர் .உண்மையில் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களுக்கு ஓவியத்தை விளக்கினார் அவர் சொல்லாவிட்டால் எத்தனை பேருக்கு அதன் சிறப்பு புரிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி ? உண்மையில் இப்படி பட்ட அரசு ஊழியரை காண்பதுஅரிது தான்.



முதலில் குகை ஓவியங்கள் இருக்கும் குன்றை நோக்கி நடந்தோம் குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை. தூண்களின் முகப்பில் நாட்டியக் கணிகையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்த கன்னியரின் ஓவியங்கள் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், நாட்டியக் கச்சையணிந்து பலவித அணிகலன்களையும் அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவ்விரு கன்னியரும் இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.


சித்தன்ன வாசல் ஓவியங்களில் தலைசிறந்து நிற்பது தாமரைப் பொய்கையின் ஓவியமாகும். குடைவரைக் கோயிலின் முகமண்டபத்து விதானத்தில் இவ்வோவியம் காணப்படுகின்றது. இவ்வோவியத்தில் பல்வேறு உயிர்களின் உணர்ச்சிகளையும், ஆரவாரத்திற்கிடையே அமைதியாய் அடங்கி நிற்கும் சமணத் துறவிகளின் உணர்ச்சிகளையும் அற்புதமாக ஓவியக் கலைஞன் வண்ணங்களைக் கொண்டு வடித்துக் காட்டியுள்ளான். இவ்வோவியத்திலுள்ள நீர் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றில் செந்தாமரையும் வெண்டாமரையும் பசுமையான இலைகளுக் கிடையே பூத்துக் குலுங்குகின்றன. இதில் முரட்டுக் குணங்கொண்ட எருமைகளும் பேராற்றல் கொண்ட யானைகளும் இறங்கி, தமது வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. களிறுகள் களிப்புடன் தாமரை மலர்களைத் தண்டுடன் பற்றி இழுக்கின்றன. தாமரைப் பொய்கையில் கூடி வாழும் அன்னப் பறவைகள் சிறகை விரித்து, தமது குஞ்சுகளுடன் பரிதவித்து ஒலியெழுப்புகின்றன. இப்பறவைகளின் அச்சத்தை அவற்றின் இமை விரிந்து விழிகள் பிதுங்கி நிற்கும் கண்கள் புலப்படுத்துகின்றன. நீரில் வாழும் மீன்கள் விலங்குகளின் காலடியில் பட்டு அழிந்து போகாமல் இருக்க அஞ்சித் துள்ளுகின்றன. புறவுலக ஆரவாரங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் அமைதியாய்த் தாமரைக் குளத்தில் மூன்று துறவியர் அறிவனுக்குப் படைப்பதற்குத் தாமரை மலர்களைப் பறிக்க இறங்கியுள்ளனர். அரையில் கோவணம் அணிந்த ஒரு துறவியின் தோளில் அல்லியும் தாமரையும் தண்டுடன் காணப்படுகின்றன. மற்றொரு துறவி இடக்கரத்தில் மலர்க் கூடையை வைத்துக் கொண்டு வலக்கரத்தால் தாமரை மலரைத் தண்டோடு பற்றி இழுக்கின்றார். மூன்றாவது துறவி தாமரை மலரைத் தாங்கிக் கொண்டு மற்றொரு கரத்தில் முத்திரை காட்டுகின்றார். மொத்தத்தில் இயற்கையின் நாடகத்தை நன்கு உணர்ந்த ஓர் ஓவியன் அவற்றைக் காண்பவர் கண்கள் மனத்தை விட்டு அகலாத முறையில் ஓவியமாக வடித்துக் காட்டியுள்ளான் என்றே சொல்ல வேண்டும்


இதை எல்லாம் ரசித்து விட்டு சமணர் படுக்கை காண சென்றேன் உயரமான மலையில் ஏறுவதற்குள் போதும் என்றாகி விட்டது கொளுத்து வெயிலில் என் வயிற்றேரிச்சலை அதிகபடுதினார்கள் காதல் ஜோடிகள் !வியர்க்க முச்சு வாங்க நாங்கள் சென்றிந்த பொழுதுமேலே சமணர் படுக்கை அருகில் மூன்று ஜோடிகள் ஜாலியாக  இருந்தனர்.வாழ்க தொல்பொருள் துறை .!சமணர் படுக்கைக்கு சென்று பார்த்ததும் ஏன் கம்பிவேலி போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது, சமணர் படுக்கையை காதலர்கள் தங்கள் வேலைகளை செய்யும் இடமாக மாற்றியிருந்தனர் .ஒரு புறம் இந்து மத வெறியர்கள் இந்த சமண சின்னத்தை அழிக்க முயசிக்கின்றனர் ,மற்றொரு புறம் கல் குவாரிகள் ,இன்னொருபுறம் அரசின் அலட்சியம் மொத்தத்தில் ஒரு வரலாறு அழிந்து கொண்டு வருகிறது .முற்றாய் அழிந்து போகுவதற்கு முன் வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விட்டு வாருங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக